

டெல்லி மஜ்பூரில் குடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு எதிரானவர்கள், ஆதரவானவர்கள் இடையே இன்று 2-வது நாளாக மோதல் வெடித்தது. இதில் இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கல்வீசிக் கொண்டதால் பெரும் பதற்றமான சூழல் காணப்படுகிறது.
இந்தக் கலவரத்தில் தலைமைக் காவலர் ஒருவர் கல்வீச்சில் பலியானார் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக ஜாப்ராபாத், டெல்லி மஜ்பூர்-பாபர்பூர் மெட்ரோ ரயில் நிலையம் நுழைவு மற்றும் வெளியேறும் பாதை மூடப்பட்டது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஷாகீன் பாக் பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே டெல்லியின் தென்கிழக்குப் பகுதியான ஜாப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று இரவு முதல் முஸ்லிம் பெண்கள் 500-க்கும் மேற்பட்டோர் சிஏஏவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் மூடப்பட்டு, கதவுகள் பூட்டப்பட்டு பலத்த போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டது. பெண்கள் கைகளில் தேசியக் கொடி ஏந்தியும், சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், சீலம்பூர் மற்றும் மஜ்பூர், யமுனா விஹார் இடையிலான 66-வது சாலைப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் பலமுறை போராட்டக்காரர்களிடமும், பெண்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் சிஏஏவை திரும்பப் பெறும்வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்தனர். இந்நிலையில் அங்குப் பெண் போலீஸார் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜாப்ராபாத் பகுதியில் சாலை மூடப்பட்டிருப்பதைக் கண்டித்து சிஏஏவுக்கு ஆதரவாளர்களும், சிஏஏ எதிர்ப்பாளர்களும் திரண்டனர். இரு தரப்பினரும் திடீரென ஒருவர் மீது ஒருவர் கற்களையும், பாட்டில்களையும் வீசியதால், அந்த இடமே கலவரக் கோலமாக மாறியது. இதனால் போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கூட்டத்தினரைக் கலைத்தனர்.
இந்நிலையில், இன்று மஜ்பூர் பகுதியில் சிஏஏ ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் ஒருவொருக்கொருவர் மோதிக்கொண்டு, கற்களை வீசித்தாக்கினர். சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள், கடைகளை இருதரப்பினரும் அடித்து நொறுக்கியதால் பதற்றமாக மாறியது.
இதனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு போலீஸார், தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் கூட்டத்தினரைக் கலைத்தனர்.இதனால் ஜாப்ராபாத் மெட்ரோ ரயில்நிலையத்தின் நுழைவு வாயில், வெளியேறும் வாயில் கதவுகள் மூடப்பட்டன. அங்கு ஏராளமான போலஸீர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே இந்த கலவரத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது, போராட்டக்காரர்கள் கல்வீச்சிலிலும், தாக்குதலிலும் பலர் காயமடைந்தனர். கல்வீ்ச்சில் கோகுல்பூரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட தலைமைக் காவலர் ரத்தன் லால் உயிரிழந்தார் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே ஊடகவியலாளர்கள் சிலரையும் போராட்டக்காரர்கள் அடித்து உதைத்ததாக பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.
இதற்கிடையே டெல்லியில் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவரக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் ஆகியோருக்கு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ட்விட்டரில் விடுத்த அறிவிப்பில்," டெல்லியில் பல்வேறு இடங்களில் ஒற்றுமையையும், அமைதியையும் குலைக்கும் வகையில் நடக்கும் சம்பவங்கள் வேதனையைத் தருகின்றன. மரியாதைக்குரிய துணை நிலை ஆளுநர், உள்துறை அமைச்சர் ஆகியோர் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், சமூக ஒற்றுமையைக் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். யாரையும் ஊர்வலம் செல்ல அனுமதிக்கக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார்