

அமெரிக்கா இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்பு நடாக திகழ்கிறது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசினார்.
அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்ப்பும், அவரது மனைவி மெலானியாவும் இன்று காலை 11.40 மணிக்கு அகமதாபாத் வந்தனர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் வரவேற்றார்.
பின்னர் விமான நிலையத்தில் இருந்து கிரிக்கெட் மைதானத்துக்கு ட்ரம்ப் காரில் சென்றார். வழிநெடுக மக்கள் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வழியில் 30 இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மேடைகளில் கர்பா நடனம் உட்பட இந்தியாவின் 28 மாநிலங்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து வழியில் சபர்மதி ஆசிரமத்துக்கு ட்ரம்ப் சென்றார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஆசிரமத்தை அவர் சுற்றிப் பார்த்தார்.
அங்குள்ள மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு அவர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அந்த ஆசிரமத்தில் காந்தி பயன்படுத்திய பொருட்களை வியப்புடன் பார்த்தார். பார்வையாளர்கள் பதிவேட்டில் அவர் கையெழுத்திட்டார்.
ட்ரம்ப்பும், அவரது மனைவி மெலானியாவும் சபர்மதி ஆசிரமத்தில் உள்ள ராட்டையில் நூல் நூற்றனர். அப்போது ராட்டை குறித்து பிரதமர் மோடி அவருக்கு விளக்கம் அளித்தார்.
பின்னர், மதியம் 1.05 மணிக்கு அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்துக்கு சென்றார். அங்கு ட்ரம்ப்பை வரவேற்று 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
இந்தநிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியதாவது
‘‘இந்தியா மனித குலத்திற்கே நம்பிக்கை அளிக்கிறது. இந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்தியாவின் நம்பிக்கைக்கு உரிய நட்பு நாடாக அமெரிக்கா திகழும். எனது உண்மையான நண்பர் மோடி. எங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்த நண்பர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
அமெரிக்காவின் வளர்ச்சியில் பங்களிக்கும் குஜராத்தியர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்தியர்கள் தாங்கள் நினைத்ததை எப்படியும் அடைந்துவிடுவார்கள். இந்தியாவுக்காக பிரதமர் மோடி இரவு பகலாக உழைக்கிறார்.
இணையதள சேவை மற்றும் சமையல் எரிவாயு சேவையை இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்துள்ளார் மோடி. கடின உழைப்பால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணம் மோடி. கடந்த 10 ஆண்டுகளில் 27 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா இந்தியாவின் நம்பிக்கைகுரிய நட்பு நடாக திகழ்கிறது. உலக அளவில் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் இருநாடுகளும் இணைந்து செயல்படும். இந்தியாவின் பாதுகாப்பு தேவையக்கான ஆயுதங்களை அமெரிக்கா வழங்கும். ’’ எனக் கூறினார்.