ஷாகின் பாக் போராட்டம்: சீல் வைத்த கவரில் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மத்தியஸ்தக் குழுவினர்

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
2 min read

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கு மேலாகப் போராட்டம் நடத்தி வருபவர்களிடம் பேச்சு நடத்த மத்தியஸ்தக் குழுவினரை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இந்தக் குழுவினர் தங்கள் அறிக்கையை சீல் வைத்த கவரில் உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக டெல்லியின் ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கு மேலாகத் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பெண்கள், குழந்தைகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யூனியன் பிரதேசமான டெல்லியில் இஸ்லாமிய மக்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய உள்துறை அதிகாரிகளும், டெல்லி போலீஸாரும் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சிஏஏ சட்டத்தைத் திரும்பப் பெற்றால்தான் போராட்டத்தைத் திரும்பப் பெறுவோம் என்று போராட்டக்காரர்கள் தீர்மானமாக உள்ளனர்.

ஷாகின் பாக் பகுதியில் நடக்கும் போராட்டத்தால் அப்பகுதி மக்களுக்குப் பெரும் இடையூறாக இருப்பதாகக் குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "ஒரு சட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்த மக்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அது மக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது" எனத் தெரிவித்தது.

மேலும், போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்த மூத்த வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹெக்டே, சாதனா ராமச்சந்திரன் ஆகியோரைப் பேச்சுவார்த்தை நடத்த அமர்த்தியது. இந்தக் குழுவினர் கடந்த 4 நாட்களுக்கு மேலாகச் சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இந்தப் பேச்சுவார்த்தையில் பரிமாறிக் கொள்ளப்பட்ட விவரங்கள் குறித்து தங்களின் அறிக்கையை இன்று குழுவினர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

ஷாகின் பாக் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய சாதனா ராமச்சந்திரன்: படம் | ஏஎன்ஐ.
ஷாகின் பாக் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய சாதனா ராமச்சந்திரன்: படம் | ஏஎன்ஐ.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம். ஜோஸப் தலைமையிலான அமர்வு முன் இந்த அறிக்கையை மத்தியஸ்தக் குழுவினர் சீல் வைத்த கவரில் தாக்கல் செய்தார்கள்.

அப்போது மூத்த வழக்கறிஞர் சாதனா ராமச்சந்திரன் நீதிபதியிடம் கூறுகையில், "எங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய நீதிபதிகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம். பல்வேறு அனுபவங்கள் எங்களுக்கு இதன் மூலம் கிடைத்தது" எனத் தெரிவித்தனர்.

அந்த அறிக்கையைப் பெற்றுக்கொண்ட நீதிபதிகள் அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்த பின் வழக்கு வரும் 26-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

அப்போது மனுதாரர்களின் வழக்கறிஞர்களில் ஒருவர் இந்த அறிக்கையை எங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு நீதிபதிகள் அமர்வு கூறுகையில், "நாங்கள் இங்குதான் இருக்கிறோம். எல்லோரும் இங்குதான் இருக்கிறோம். அறிக்கையின் முழு விவரம் என்னவென்று நாங்கள் தெரிந்து கொள்கிறோம். இது நீதிமன்றத்துக்கு மட்டும் உரியது" எனத் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in