சபர்மதி ஆசிரமத்தில் ட்ரம்ப்: ராட்டையில் நூல் நூற்ற மெலானியா

சபர்மதி ஆசிரமத்தில் ட்ரம்ப்: ராட்டையில் நூல் நூற்ற மெலானியா
Updated on
1 min read

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்தார்.

அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்ப்பும், அவரது மனைவி மெலானியாவும் இன்று காலை 11.40 மணிக்கு அகமதாபாத் வந்தனர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் வரவேற்றார்.

பின்னர் விமான நிலையத்தில் இருந்து கிரிக்கெட் மைதானத்துக்கு ட்ரம்ப் காரில் சென்றார். வழிநெடுக மக்கள் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வழியில் 30 இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மேடைகளில் கர்பா நடனம் உட்பட இந்தியாவின் 28 மாநிலங்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து வழியில் சபர்மதி ஆசிரமத்துக்கு ட்ரம்ப் சென்றார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஆசிரமத்தை அவர் சுற்றிப் பார்த்தார்.

அங்குள்ள மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு அவர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அந்த ஆசிரமத்தில் காந்தி பயன்படுத்திய பொருட்களை வியப்புடன் பார்த்தார். பார்வையாளர்கள் பதிவேட்டில் அவர் கையெழுத்திட்டார்.

ட்ரம்ப்பும், அவரது மனைவி மெலானியாவும் சபர்மதி ஆசிரமத்தில் உள்ள ராட்டையில் நூல் நூற்றனர். அப்போது ராட்டை குறித்து பிரதமர் மோடி அவருக்கு விளக்கம் அளித்தார்.

பின்னர், மதியம் 1.05 மணிக்கு அகமதாபாத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்துக்குச் செல்கிறார். அங்கு அவரை வரவேற்று 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சுமார் 1.25 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in