

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சி நடைபெறும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்ப்பும், அவரது மனைவி மெலானியாவும் இன்று காலை 11.40 மணிக்கு அகமதாபாத் வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் வரவேற்கிறார்.
விமான நிலையத்தில் இருந்து கிரிக்கெட் மைதானத்துக்கு ட்ரம்ப் காரில் செல்கிறார். வழிநெடுக மக்கள் திரண்டு நின்று அவருக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர். வழியில் 30 இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மேடைகளில் கர்பா நடனம் உட்பட இந்தியாவின் 28 மாநிலங்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
வழியில் சபர்மதி ஆசிரமத்துக்கு ட்ரம்ப் செல்கிறார். அந்த ஆசிரமத்தை அவர் சுற்றிப் பார்க்க உள்ளார். ஆசிரமத்தை ஒட்டியுள்ள சபர்மதி கரையில் மேடை அமைக்கப்பட்டு ட்ரம்ப், அவரது மனைவி மெலானியா, பிரதமர் மோடிக்காக 3 இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
பின்னர், மதியம் 1.05 மணிக்கு அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்துக்கு செல்கிறார். அங்கு அவரை வரவேற்று 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சுமார் 1.25 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.
நிகழ்ச்சி நடைபெறும் சில மணிநேரங்களுக்கு முன்னதாகவே ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டு வருகின்றனர். பிசிசிஐ தலைவர் கங்குலி பொதுச்செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்டோரும ் வருகை தந்துள்ளனர். அங்கு கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன.
இந்த ஸ்டேடியம் குஜராத் கிரிக்கெட் சங்கத்துக்கு சொந்தமானது. பழைய ஸ்டேடியம் 1982-ம் ஆண்டு 49 ஆயிரம் இருக்கைகளுடன் கட்டப்பட்டது. குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது அந்த ஸ்டேடியத்தை இடித்துவிட்டு பிரமாண்ட ஸ்டேடியம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி 1.10 லட்சம் பேர் அமரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்டேடியம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமாகும். 64 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த ஸ்டேடியம் 700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த ஸ்டேடியத்தில் கிளப் ஹவுஸ், மிகப்பெரிய நீச்சல் குளம், உடைமாற்றும் அறை உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.