

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 2 நாள் பயணமாக இன்று நண்பகலில் இந்தியா வருகிறார். அகமதாபாத் வரும் ட்ரம்புக்கு பிரமாண்ட வரவேற்பு வழங்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்ப்பும், அவரது மனைவி மெலானியாவும் இன்று காலை 11.40 மணிக்கு அகமதாபாத் வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் வரவேற்கிறார்.
விமான நிலையத்தில் இருந்து சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்துக்கு ட்ரம்ப் காரில் செல்கிறார். வழிநெடுக மக்கள் திரண்டு நின்று அவருக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர். வழியில் 30 இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மேடைகளில் கர்பா நடனம் உட்பட இந்தியாவின் 28 மாநிலங்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
வழியில் சபர்மதி ஆசிரமத்துக்கு ட்ரம்ப் செல்கிறார். அந்த ஆசிரமத்தை அவர் சுற்றிப் பார்க்க உள்ளார். ஆசிரமத்தை ஒட்டியுள்ள சபர்மதி கரையில் மேடை அமைக்கப்பட்டு ட்ரம்ப், அவரது மனைவி மெலானியா, பிரதமர் மோடிக்காக 3 இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
‘நமஸ்தே ட்ரம்ப்’
பின்னர், மதியம் 1.05 மணிக்கு அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்துக்கு செல்கிறார். அங்கு அவரை வரவேற்று 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சுமார் 1.25 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.
அகமதாபாத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு ட்ரம்பும் அவரது குடும்பத்தினரும் புறப்படுகின்றனர். மாலை 4.45 மணிக்கு ஆக்ரா செல்லும் அவர்கள் 5.15 மணிக்கு தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க உள்ளனர். ஆக்ராவில் இருந்து 6. 45 மணிக்கு விமானத்தில் டெல்லி செல்லும் ட்ரம்ப் அங்குள்ள ஐடிசி மவுரியா நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை காலை 10 மணிக்கு ட்ரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. 10.30 மணிக்கு ட்ரம்பும் மெலானியாவும் ராஜ்காட் சென்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளனர்.
இதைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், அதிபர் ட்ரம்பும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். பாதுகாப்பு, தீவிரவாத ஒழிப்பு, வர்த்தகம், எரிசக்தி உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பிறகு இரு தலைவர்களும் கூட்டாக நிருபர்களை சந்திக்க உள்ளனர்.
ட்ரம்பின் மனைவி மெலானியா டெல்லியில் உள்ள பள்ளியில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மாலை 3 மணிக்கு டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு ட்ரம்ப் செல்கிறார்.அங்கு இந்திய தொழிலதிபர்களுடன் அவர் கலந்துரையாடுகிறார். இரவு 7.30 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ட்ரம்புக்கு விருந்து அளிக்கப்படுகிறது. இதன்பிறகு இரவு 10 மணிக்கு ட்ரம்ப் அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்கிறார்.
அமெரிக்க அதிபரின் வருகையை ஒட்டி அகமதாபாத் நகரில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 25,000-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.