

இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான் ரவி பூஜாரி தென்னாப்பிரிக்காவில் கைது செய்யப்பட்டார். இந்திய அதிகாரிகள் குழுவினர் அவரை இந்தியாவுக்கு அழைத்து வருகின்றனர்.
கர்நாடகாவைச் சேர்ந்தவர் ரவி பூஜாரி. இவர் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், சோட்டா ராஜனுடன் ஏற்கெனவே தொடர்பு வைத்திருந்தார். கர்நாடகா மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் மிரட்டி பணம் பறித்தல், கொலை உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது பதிவாகி உள்ளன. கடந்த 15 ஆண்டுகளாக அவர் தலைமறைவாக உள்ளார். இதனால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் தங்கியிருந்த பூஜாரி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வர அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டிருந்த நிலையில், உள்ளூர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் அங்கிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு தப்பிச் சென்றார்.
இந்நிலையில், தென்னாப்பிரிக்கா மற்றும் செனகல் போலீஸார் அவரை தேடி வந்தனர். ஒரு கிராமத்தில் தங்கியிருந்த அவரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கர்நாடக ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் குழு தென்னாப்பிரிக்கா விரைந்துள்ளது. பூஜாரியை அங்கிருந்து செனகல் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை முடித்த பின்னர், பூஜாரியை அழைத்துக் கொண்டு அதிகாரிகள் இந்தியா திரும்புகின்றனர். இன்று இந்தியா வந்தடைவார்கள் என கர்நாடக போலீஸ் தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - பிடிஐ