

காஷ்மீரில் சுமார் 6 மாதங்களுக்கு பிறகுஅங்குள்ள பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன.
அரசமைப்புச் சட்டத்தின் 370-வது சட்டப்பிரிவு காஷ்மீருக்கு 70 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்தது. காஷ்மீரில் நிலம் உள்ளிட்ட சொத்துகளை மற்ற மாநிலத்தவர்கள் வாங்க முடியாது; காஷ்மீர் சட்டப்பேரவையின் அனுமதி இல்லாமல் அங்கு மத்திய அரசின் உத்தரவுகள் செல்லாது உட்பட ஏராளமான சலுகைகளை அந்த சட்டப்பிரிவு உறுதி செய்தது.
இதனிடையே, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி மத்திய அரசு அதிரடியாக நீக்கியது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு எழுந்ததால் காஷ்மீரில் பல்வேறு தடை உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக, பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. பின்னர், சில நாட்களில் கல்லூரிகள் வழக்கம் போல இயங்கினாலும் பள்ளிகள் மட்டும் திறக்கப்படாமல் இருந்தது. அசாதாரண சூழல் நிலவியதால் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டியதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில், காஷ்மீரில் தற்போது இயல்பு நிலை திரும்பியிருப்பதால் பள்ளிகளை திறப்பதுகுறித்து அரசு ஆலோசனை நடத்தி வந்தது. இதற்கு பெரும்பாலான பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, காஷ்மீரில் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 6 மாதகாலத்துக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.