

அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு அதிபர் ட்ரம்ப் செல்வாரா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், மோதிரா அரங்கைத் திறந்து வைக்கும் முன்பாக, அங்கு செல்வார் என்று உறுதி செய்யப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முதல் முறையாக இந்தியாவுக்கு நாளை வருகிறார். 2 நாட்கள் தங்கி இருக்கும் ட்ரம்ப் அகமதாபாத்திலும், டெல்லியிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
அகமதாபாத்தில் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோதிரா மைதானத்தைப் பிரதமர் மோடியுடன் சேர்ந்து அதிபர் ட்ரம்ப்பும் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் மட்டும் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து அதிபர் ட்ரம்ப்பும், பிரதமர் மோடியும் திறந்த வாகனத்தில் மக்களைச் சந்திக்கின்றனர். அதன்பின் மோதிரா அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்கின்றனர்.
இதற்கிடையே மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு அதிபர் ட்ரம்ப் செல்வாரா என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும் அதிபர் ட்ரம்ப் வருகைக்காக சபர்மதி ஆசிரமத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டன. மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிரமான சோதனைகளும், பல அடுக்குப் பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டன. ஆனால், வெள்ளை மாளிகையில் இருந்து எந்தவிதமான ஒப்புதலும் வராததால் ட்ரம்ப், சபர்மதி ஆசிரமம் செல்வாரா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் இன்று பிற்பகலுக்குப் பின் கிடைத்த தகவலின்படி அதிபர் ட்ரம்ப் சபர்மதி ஆசிரமம் செல்ல உள்ளார். மோதிரா மைதானத்துக்குச் செல்லும் முன்பாக சபர்மதி ஆசிரமத்துக்கு வரும் ட்ரம்ப் அங்கு பார்வையிடுகிறார்.
கடந்த 1917-ம் ஆண்டு முதல் 1930-ம் ஆண்டு வரை மகாத்மா காந்தியும், அவரின் மனைவி கஸ்தூரி பாவும் இங்குதான் வசித்தனர்.
இதற்கு முன் இந்தியா வந்திருந்த சீன அதிபர் ஜி ஜின்பிங், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் சபர்மதி ஆசிரமம் வந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபர் ட்ரம்ப் சபர்மதி ஆசிரமம் வருவது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அங்கு பாதுகாப்பு இன்னும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தில் அதிபர் ட்ரம்ப்புடன் அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப், மகள் இவாங்கா, மருமகன் ஜார்ட் குஷ்னர் ஆகியோர் வருகின்றனர். நாளை நண்பகலில் அகமதாபாத்துக்கு ட்ரம்ப் குடும்பத்தினர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிபர் ட்ரம்ப்புடன் நிதித்துறை அமைச்சர் ஸ்டீவன் நுசின், வர்தகத்துறை அமைச்சர் வில்பர் ராஸ், பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன், எரிசக்தித் துறை அமைச்சர் டான் புரோலிட்டி ஆகியோர் வருகின்றனர். அகமதாபாத் பயணத்தை முடித்துக்கொண்டு அதிபர் ட்ரம்ப் ஆக்ரா சென்று தாஜ்மஹாலைப் பார்த்து ரசிக்க உள்ளார்.