

குஜராத் முன்னேற்ற மாடல் என முன்வைத்து அதுதான் இந்தியாவுக்கு உகந்தது என பாஜக பிரச்சாரம் செய்கிறது; இந்தியா ஒளிர்கிறது என அது செய்த பிரச்சார பலூன்போலவே குஜராத் முன்னேற்ற மாடல் பலூனும் வெடித்துச் சிதறப்போகிறது என்றார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.
வார்தாவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வெள்ளிக் கிழமை அவர் பேசியதாவது:
பாஜக தலைவர்கள் 2004 மற்றும் 2009ல் இந்தியா ஒளிர்கிறது என்ற பிரச்சார பலூனை தயாரித்தார்கள். அது வெடித்தது. இப்போது பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி அரசின் குஜராத் முன்னேற்ற மாடல் என்ற காஸ் நிரப்பிய பலூனை தயாரித்திருக்கிறார்கள். அதுவும் வெடிக்கப் போகிறது.
குஜராத் முன்னேற்ற மாடல் என்றால் என்ன பிரமாதம் என்றே தெரியவில்லை. இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் மகாராஷ்டிரத்தின் பங்கு 17 சதவீதம். மகாராஷ்டிரம்தான் முதலிடத்தில் இருக்கிறது. அங்கு எதிலும் குறைவில்லை.
ஊழல் ஒழிப்பு ஆயுதம்
ஊழலை ஒழிப்பதற்கான ஆயுதம் தகவல் உரிமை சட்டம்தான். இந்த சட்டம் வெளிப்படைத் தன்மைக்கு உத்தரவாதம் தருகிறது. இந்த சட்டத்தை காங்கிரஸ் அரசுதான் கொண்டுவந்தது.
பெண்களுக்கு எல்லா துறைகளி லும் அதிகாரம் தரப்படுவது முக்கியமானது. அதைக்கருதியே, மாநிலச் சட்டப் பேரவைகள், மக்க ளவை, வர்த்தகத்தில் அவர்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் தரப்படவேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது.
மக்களவையிலும் மாநில சட்ட மன்றங்களிலும் மகளிருக்கு 33 சதவீத ஒதுக்கீடு வழங்க விரும்பி மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் கூட்டணி விருப்பம் காட்டியது, ஆனால் அதை தடுத்து நிறுத்தியது எதிர்க்கட்சி.
விவசாய கடன் தள்ளுபடி
விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ரூ. 70 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற் போக்குக் கூட்டணி அரசு. நாட்டுக் காக ரத்தம், வியர்வையை சிந்துகிறார்கள் விவசாயிகள். அவர்களின் வாழ்வாதாரமாக திகழும் நிலத்தை கையகப்படுத்தும் போது உரிய இழப்பீடு கிடைப் பதற்காக நில கையகப்படுத்துதல் சட்டத்தை காங்கிரஸ் அரசு கொண்டு வந்துள்ளது. இதனால் சந்தை விலையை விட 4 மடங்கு தொகையை தாம் விற்கும் நிலத்துக்கு விவசாயிகள் பெறமுடியும்.
வேலைவாய்ப்பு
கோடிக்கணக்கான இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க மக்களவைத் தேர்தலுக்கான தமது தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் வாக்குறுதி கொடுத்திருக்கிறது. தொழிற்பேட்டைகளை அமைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுப்போம். இப்போது நாம் இறக்குமதி செய்யும் பொருள்களை, நமது இளைஞர்களே உற்பத்தி செய்யும் நிலைமையை உருவாக்கிடுவோம்.
காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் மக்களின் சுகாதாரத்தைஅடிப்படை உரிமையாக்குவோம். இந்த நாடு நமது நாடு என்ற உணர்வு ஏழைகள் மனதில் ஏற்பட காங்கிரஸ் விரும்புகிறது என்றார் ராகுல் காந்தி.