

கோவா கடற்கரையில் இந்தியக் கடற்படையின் மிக் -29 கே விமானம் அரபிக் கடலில் மோதியதில் விபத்துக்குள்ளானது. இதில் விமானி பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது.
கோவாவை தளமாகக் கொண்ட மிக் -29 கே கடற்படை போர் விமானங்கள், தற்போது ஐ.என்.எஸ். விக்ரமாதித்யாவின் கப்பல் தளத்திலிருந்து பறப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இன்று நடைபெற்ற சம்பவத்தின்போது இந்த விமானம் தெற்கு கோவாவின் வாஸ்கோவில் உள்ள ஐ.என்.எஸ். ஹன்சா கடற்படைத் தளத்திலிருந்து பறந்து சென்றதாகக் கூறப்படுகிறது.
மிக் -29 படை விமானத்தைப் பொறுத்தவரை முதன்முதலாக பயிற்சியின்போது வானில் பறக்கவிட்ட நாடு இந்தியாதான். ரஷ்ய கடற்படைக்கு முன்னதாகக் கூட இதை இந்தியாவே முதலில் செயல்படுத்தியுள்ளது.
மிக் -29 கே கடற்படை விமானம் ஏற்கெனவே இரண்டு விபத்துகளைக் கண்டுள்ளது. ஒன்று 2018 ஜனவரியில் மற்றும் மற்றொரு விபத்து கடந்த ஆண்டு நவம்பரில். இரண்டு விபத்துகளிலும் விமானிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்நிலையில், இன்று காலையில் இரட்டை இன்ஜின், ஒற்றை இருக்கை கொண்ட மிக்-29 கே விமானம் விபத்துக்குள்ளானது. தொழில்நுட்பக் காரணங்களால் இது நிகழ்ந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் விமானி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ''கோவா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் மிக்-29 கே விமானம் விபத்துக்குள்ளானது. இதில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
இந்த விமானம் வழக்கமான பயிற்சிப் பயணத்தில் இருந்தது. வழக்கமாக நடத்தப்படும் பயிற்சிப் போட்டி ஒன்றில் பங்கெடுத்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் விமானத்தின் பைலட் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொழில்நுட்பக் காரணங்களால் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. எனினும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.