

லாட்டரி டிக்கெட்டுகளுக்கு வரும் மார்ச் 1-ம் தேதி முதல் 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்று அரசின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் லாட்டரி டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதம் ஒற்றை வரி விதிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த வரிவிதிப்பு வரும் மார்ச் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ''லாட்டரி டிக்கெட்டுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வரிவீதம் திருத்தப்பட்டதன்படி, மத்திய அரசு விதிக்கும் அதே சதவீத அளவு வரி மாநில அரசும் விதிக்க அனுமதியளிக்கப்பட்டது. இதன்படி மத்திய அரசு சார்பில் 14 சதவீதம், மாநில அரசுகள் சார்பில் 14 சதவீதம் என மொத்தம் 28 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இந்த வரிவிதிப்பு நடைமுறை வரும் மார்ச் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
தற்போது மாநில அரசு லாட்டரி டிக்கெட்டுகளுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட லாட்டரிக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
லாட்டரி டிக்கெட்டுகளுக்கு இரு விதமான வரிவிதிப்பு நடைமுறையில் உள்ளது. அதைக் களைந்து ஒரே விதமான வரிவிதிப்பு தேவை என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, ஜிஎஸ்டி கவுன்சிலில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களில் ஒரு குழு அமைக்கப்பட்டு அந்தக் குழு ஆய்வு செய்து சீரான வரிவீதத்தை முடிவு செய்தது. இதன்படி லாட்டரி டிக்கெட்டுகள் முழுவதும் சீராக 28 சதவீதம் வரிவிதிக்க கடந்த டிசம்பர் மாதம் கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.