

தங்கச் சுரங்கம் தோண்டப்போவதாக செய்தி பரவிய நிலையில் தாங்கள் வீடற்று வெளியேற்றப்படுவோம் என்று உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட பழங்குடிக் குடும்பங்கள் இப்போதே அஞ்சத் தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
20 வருட ஆய்வுக்குப் பிறகு நேற்று சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள 12 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 3,000 டன் தங்கப் படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. உறுதி செய்யப்படாத இந்தச் செய்தி காட்டுத்தீயென பரவிய நிலையில், சோன் பஹாடி மற்றும் ஹார்டி பகுதிகளில் தங்கம் இருப்பதை இந்திய புவியியல் ஆய்வு மையம் பின்னர் மறுத்தது. ஆனால் சுரங்க ஏலத்திற்கான இ-டெண்டரிங் அதிகாரப்பூர்வ செயல்முறைக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுரங்க அதிகாரி தெரிவித்தார்.
சோன்பத்ரா மாவட்டம் இதன்மூலம் தங்கம் இருப்புப் பட்டியலில் முதல் இடத்திலும் உலகின் உயர்ந்த இடத்தையும் பிடிக்கும் என்றும் உறுதியாக கூறப்பட்டது. இயற்கை எழில்மிக்க இம்மாவட்டம் விந்திய மலைகள் மற்றும் கைமூர் மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. பாக்சைட், சுண்ணாம்பு, நிலக்கரி, தங்கம் போன்ற ஏராளமான தாதுக்கள் உள்ளன. ஏராளமான மின் உற்பத்தி நிலையங்கள் இருப்பதால் சோன்பத்ராவை "இந்தியாவின் எரிசக்தி மூலதனம்" என்று அழைக்கின்றனர். தற்போது இங்கு தங்கப் படிவுகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியது, ஆனால் புவியியல் துறை இதனை மறுத்து செய்தி வெளியிட்டது
அதிகபட்ச தங்க இருப்பு காரணமாக சோன்பத்ராவின் பெயர் நாட்டின் தலைப்புச் செய்திகளில் களைகட்டத் துவங்கிய அதேநேரத்தில் பனாரி கிராம பஞ்சாயத்தின் 250 குடும்பங்களும் தோஹர் மற்றும் பிபராஹ்வா கிராமங்களின் 200 குடும்பங்களும் இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மலைகளில் வசிக்கும் 400க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் அச்சத்தில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோன்பத்ரா பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதி. இங்கு பைகா மற்றும் கோண்ட் பழங்குடியினர் விவசாயம் மற்றும் வேட்டைத் தொழிலிலிருந்து தங்கள் வாழ்க்கையை உருவாக்கிக்கொண்டார்கள். அவர்கள் வீடற்றவர்களாக வெளியேற்றப்பட்டால், அவர்கள் வீடுகளைத் தவிர, அவர்கள் தங்கள் நிலங்களையும் இழக்க நேரிடும் என்பது உறுதி. இருப்பினும், மாநில அரசு சார்பாக, நிர்வாகம் அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
கிராம பஞ்சாயத்து பாண்டராக் முன்னாள் கிராமத் தலைவரும் 'வனவாசி சேவா ஆசிரம'த்துடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் ஆர்வலருமான ராமேஸ்வர் கோண்ட் இதுகுறித்து கூறியதாவது:
“பண்டரிக் கிராம பஞ்சாயத்து பகுதியில் ஹார்டி, பிண்டாரா தோஹர் மற்றும் பிப்பர்ஹாவா கிராமங்கள் உள்ளன. பைகா மற்றும் கோண்ட் பழங்குடி சமூகங்களில் பெரும்பாலானவை இங்கு வாழ்கின்றன. ஹார்டி மலையின் மூன்று பக்கங்களிலும் அமைந்துள்ளது. இப்போது இப்பகுதியில் இருந்து பழங்குடியினர் நிச்சயமாக இடம்பெயர்ந்து விடுவார்கள். அப்படி இடப்பெயர்ச்சி ஏற்பட்டால் அது எங்களுக்கு மிகப்பெரிய வாழ்வாதார நெருக்கடியை ஏற்படுத்தும். அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட அளவு இழப்பீட்டை வழங்கும், ஆனால் விவசாய நிலங்களை மீண்டும் வாங்க முடியாது. இழப்பீடு வழங்குவதற்கு பதிலாக நிலம் மற்றும் வீட்டிற்கான நிலத்தை அரசாங்கம்வழங்கினால் நல்லது.''
இவ்வாறு பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த ராமேஸ்வர் கோண்ட் தெரிவித்தார்.