

உத்தரபிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமாக நடைபெறும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியில் மட்டும் இதுதொடர்பான போராட்டங்கள் நடைபெறவில்லை.
இதன் பின்னணியில், அங்கு துணை ஆட்சியராக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மணிகண்டனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
உ.பி.யின் தெய்வீக நகரமான வாரணாசியில் பண்டிகை, விசேஷ நாட்களால் வருடம் முழுவதிலும் 144 தடை உத்தரவு அமலாக்கப்படுகிறது. இதனால் அந்நகரில் நான்கு பேருக்கு அதிகமானவர்களை காரணம் இன்றி ஒரு இடத்தில் கூடுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை நடத்த விடாமல் பாதுகாப்பதில் உ.பி. அரசு வெற்றி பெற்றுள்ளது. இதற்கு, அங்கு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உள்ளது.
இதன் பின்னணியில், வாரணாசியின் துணை ஆட்சியரான தமிழகத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற ஐஏஎஸ் அதிகாரி செயல்பட்டு வருகிறார். நெய்வேலியை சேர்ந்த மருந்தியல் பட்டதாரியான இவர் 2017-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
தொடக்கத்தில், மணிகண்டன் வாரணாசியின் பிந்த்ரா எனும் பகுதி பொறுப்பாளராக இருந்துள்ளார். அப்போது, அவர் குறை கேட்கும் கூட்டங்கள் நடத்தி, போராட்டத்திற்கு திட்டமிட்டு வந்த முஸ்லிம் உலாமாக்கள் உள்ளிட்டோரை நேரடியாக சந்தித்துள்ளார்.
அப்போது அவர்கள் பகுதியில் உள்ள பல்வேறு குறைகளை கேட்டு உடனடியாகவும் தீர்த்து வைத்துள்ளார். உதாரணமாக, மதன்பூரில் முஸ்லிம்கள் வருடந்தோறும் முஹர்ரம் பண்டிகை சமயத்தின் தாஜியா ஊர்வலப் பாதையில் சாலை அமைக்கப்படாமல் இருந்துள்ளது. இது, அதிகாரி மணிகண்டனின் கவனத்துக்கு வந்திருக்கிறது. இதையடுத்து, அங்கு உடனடியாக அவர் சாலை அமைத்து கொடுத்திருக்கிறார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் துணை ஆட்சியரான மணிகண்டன் கூறும்போது, ‘எங்கள் பேச்சிலும், செயல்களிலும் உருவான நம்பிக்கையால் வாரணாசிவாசிகள் போராட்டத்தை கைவிட்டு பொதுப் பிரச்சினைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நடவடிக்கைக்காக, துணை ஆட்சியர் மணிகண்டனைப் பாராட்டி வாரணாசி ஆட்சியரான கவுசல் ராஜ் சர்மா மற்றும் காவல்துறை தலைமை அதிகாரி பிரபாகர் சவுத்ரி ஆகியோர் அவருக்கு பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர்.