

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், 2 நாட்கள் பயணமாக நாளை இந்தியா வருகிறார். அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வல்லபாய் கிரிக்கெட் மைதானம் வரை 22 கி.மீ. தூரத்துக்கு அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, முதல்முறையாக நாளை இந்தியா வருகிறார். குஜராத்தின் அகமதாபாத் நகர் விமான நிலையத்தில் வந்திறங்கும் அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பார் என்று தெரிகிறது. அங்கிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் கிரிக்கெட் மைதானத்துக்கு ட்ரம்ப் காரில் செல்கிறார். வழிநெடுக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ட்ரம்புக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க உள்ளனர்.
வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்கும் அதிபர் ட்ரம்ப், அங்கு நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். இதில் சுமார் 1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபரின் வருகையை ஒட்டி அவரது பீஸ்ட் கார், மரைன் ஒன் ஹெலிகாப்டர் உள்ளிட்டவை அகமதாபாத்துக்கு வந்துள்ளன. அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் நகரில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.
அகமதாபாத் நகரம் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 25 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நகரின் முக்கிய பகுதிகளில் சக்திவாய்ந்த ஜாமர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஓட்டல்கள், விடுதிகளில் போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர். அதிபர் ட்ரம்ப் வருகையின்போது முக்கிய சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட உள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் அவரது மனைவி மெலானியா, மகள் இவான்கா, மருமகன் ஜெராட் குஷ்னர் உள்ளிட்டோரும் வருகின்றனர். அகமதாபாத் வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு அங்கிருந்து ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் செல்கின்றனர். அன்றிரவு டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியா நட்சத்திர ஓட்டலில் ட்ரம்ப் தங்குகிறார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை மறுநாள் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதன்பிறகு பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்துப் பேசுகிறார். அப்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.