

இந்தியாவை உணர்ச்சிமிக்கதாக, போர்க்குணம் மிக்கதாக கட்டமைக்க தேசியவாதம், பாரத் மாதா கி ஜே என்ற வாசகங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் லட்சக்கணக்கான குடிமக்கள், குடியிருப்பவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாஜகவைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
புருஷோத்தம் அகர்வால், ராதா கிருஷ்ணா ஆகியோர் எழுதிய 'ஹூ இஸ் பாரத மாதா' என்ற நூல் வெளியீட்டு விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சுயசரிதையில் இருந்தும், டிஸ்கவரி ஆப் இந்தியா நூலில் இருந்தும், சில முக்கியமான நேர்காணல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்நூல் இருந்தது. முதலில் ஆங்கிலத்தில் வெளியான இப்புத்தகம், தற்போது கன்னடத்தில் வெளியாகியுள்ளது. இந்த நூலை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
''இந்தியாவை இன்று சக்திவாய்ந்த ஜனநாயக நாடு, உலகில் உள்ள சூப்பர் பவர் நாடுகளில் ஒன்று என்று பல்வேறு நாடுகள் அங்கீகரித்திருந்தால் அது இந்தியாவைக் கட்டமைத்த முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவையே சாரும்.
மிகவும் கொந்தளிப்பான, பிரச்சினை மிகுந்த நாட்களில் ஜனநாயக முறையிலான வழிமுறையை ஏற்றுக்கொண்டு, சமூகத்தில் பல்வேறு தரப்பட்ட கருத்துகளுக்கும் இடமளித்து வழிநடத்தினார். இந்தியாவின் முதல் பிரதமர் நேரு நாட்டின் பாரம்பரியத்தை நினைத்துப் பெருமை கொண்டார், புதிய இந்தியாவின் தேவைக்கு ஏற்றார்போல் மாற்றினார்.
பல்வேறு பல்கலைக்கழகங்கள், நவீன இந்தியாவுக்கான கலாச்சார மையங்களை நேரு உருவாக்கினார். ஆனால், நேரு தலைமையில் இன்று இருந்ததுபோல் இந்தியா அன்று இருந்திருக்காது.
துரதிர்ஷ்டவசமாக ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்கள் வரலாற்றைப் படிக்கப் பொறுமை இல்லாமல், அவர்களின் தவறான முன் கருத்தால் வேண்டுமென்றே வழிநடத்தப்பட விரும்புகிறார்கள். நேருவைத் தவறான கோணத்தில் சிறப்பாக வெளிப்படுத்த முயல்கிறார்கள். போலியானதையும், பொய் சித்தரிப்புகளையும் நிராகரிக்க அனைத்தையும் சரியான கோணத்தில் முன்வைத்தால் வரலாற்றுக்குச் சக்தி இருக்கிறது என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன்.
லட்சக்கணக்கான குடிமக்கள், குடியிருக்கும் மக்களை ஒதுக்குவதற்காக இந்தியாவை உணர்ச்சி மிக்கதாக, போர்க்குணம் மிக்கதாகக் கட்டமைக்கத தேசியவாதம், பாரத் மாதா கி ஜே என்ற வாசகங்கள் தவறாகப் பயன்படுத்தப்படும் நேரத்தில் இந்தப் புத்தகம் வெளியாகியுள்ளது''.
இவ்வாறு மன்மோகன் சிங் தெரிவித்தார்.