

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் இந்தியா வருகை குறித்து காங்கிரஸுக்கு என்ன சந்தேகம்? நாட்டின் நிலைமை உலக அளவில் உயர்த்தப்படும்போது ஏன் மகிழ்ச்சியடையவில்லை என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் அகமதாபாத்துக்கும் புதுடெல்லிக்கும் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வருகை தர உள்ளனர். ட்ரம்ப் வருகையால் இரு நாட்டு வர்த்தக உறவுகளும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரம்ப் வருகையை முன்னிட்டு, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் கலந்து கொள்ளும் 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் முழுவீச்சில் தயார் செய்யப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் ட்ரம்ப்பும், பிரதமர் மோடியும் பேரணியாகச் செல்கின்றனர். இரு தலைவர்களுக்கும் அகமதாபாத் மக்கள் வரவேற்பு அளிக்க உள்ளனர்.
இது தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது:
''பிரதமர் நரேந்திர மோடியின் கடின உழைப்பால், மற்ற நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் சோச்சியில் இருந்து மல்லாபுரம் வரை மேலும் வலுப்பெற்றுள்ளன.
இந்தியாவுடன் வர்த்தகம் என்பது ஒரு கடினமான பேரம் என்று ட்ரம்ப்பே பலமுறை கூறியுள்ளார். எனவே ட்ரம்ப்பின் வருகை இந்தோ-அமெரிக்க உறவில் ஒரு முக்கியத் தருணமாக இருக்கும். இதைப் போன்ற நாட்டின் சாதனைகளில் காங்கிரஸ் பெருமைகொள்ளத் தொடங்க வேண்டும்.
இது உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான ஜனநாயக நாடுகளின் சந்திப்பாகும். அது கொண்டாடப்பட வேண்டும். ஆனால் காங்கிரஸ் இதுகுறித்து எதுவும் சொல்லவில்லை. ட்ரம்ப் வருகையால் இந்தியாவின் நிலை உலக அளவில் உயர்கிறது. காங்கிரஸுக்கு ஏன் மகிழ்ச்சி இல்லை? அப்படியெனில் இந்தியாவின் ஆர்வங்கள் குறித்து காங்கிரஸ் கவலைப்படத் தேவையில்லை''.
இவ்வாறு சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.