

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மெலனியா டிரம்ப் ஆகியோர் இருவரும் தாஜ்மஹாலுக்குச் செல்லும் போது பிரதமர் மோடி உடன் செல்லமாட்டார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவுக்கு இரு நாட்கள் பயணமாக வரும் 24,25 ஆகிய தேதிகளில் வரும் அதிபர் ட்ரம்ப் குஜராத்தில் ஒருநாளும், டெல்லியில் ஒருநாளும் இருக்கிறார். 36 மணிநேரம் இந்தியாவில் செலவிடும் அதிபர் ட்ரம்ப் அகமதாபாத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றபின், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்குச் செல்லவும் திட்டமிட்டுள்ளார்.
இந்த பயணத்தின் போது அதிபர் ட்ரம்ப்புடன் அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப், மகள் இவாங்கா ட்ரம்ப், ட்ரம்பின் மருமகன் ஜார்ட் குஷ்னர், அமெரிக்க அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் வருகின்றனர்.
அகமதாபாத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அதிபர் ட்ரம்ப் அங்கிருந்தவாறு ஆக்ராவுக்கு திங்கள்கிழமை பிற்பகலில் வருகிறார். அங்கு தாஜ்மஹாலைச் சுற்றிப்பார்க்க உள்ளார்.
அதிபர் ட்ரம்ப்பின் ஆக்ரா பயணத்தின் போது உடன் பிரதமர் மோடி செல்வாரா என்று கேள்வி எழுந்தது. அதற்கு மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், " ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு அதிபர் ட்ரம்ப், அவரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் மட்டுமே செல்வார்கள்.
அப்போது இந்தியாவின் சார்பில் உயர் அதிகாரிகள் யாரும் அவர்களுடன் செல்லமாட்டார்கள்.
அதுமட்டுமல்லாமல் தாஜ்மஹால் என்பது, அன்பு, காதல் ஆகியவற்றின் சின்னமாகப் பார்க்கப்படுகிறது. அந்த இடத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், அவரின் மனைவி மட்டுமே செல்வார்கள். அங்குப் பிரதமரோ அல்லது இந்திய அரசின் சார்பில் உயர் அதிகாரிகளோ யாரும் செல்லமாட்டார்கள் எனத் தெரிவித்தார்