Published : 22 Feb 2020 12:41 pm

Updated : 22 Feb 2020 14:39 pm

 

Published : 22 Feb 2020 12:41 PM
Last Updated : 22 Feb 2020 02:39 PM

தமிழ் அதிகாரிகள் மீது உ.பி. முதல்வர் யோகியின் தனிக்கவனம்: அலிகர் மாவட்ட எஸ்எஸ்பியாக முனிராஜ் ஐபிஎஸ் நியமனம் 

u-p

புதுடெல்லி

உத்தரப்பிரதேசத்தின் பாஜக ஆளும் முதல்வரான யோகி ஆதித்யநாத், தமிழகத்தின் அதிகாரிகள் மீது தனிக்கவனம் செலுத்தி வருகிறார். இதன் அலிகர் மாவட்டக் காவல்துறை தலைமை கண்காணிப்பாளராக (எஸ்எஸ்பி) தமிழரான ஜி.முனிராஜ்.ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இங்கு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீவிரப் போராட்டத்தை சமாளிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் இப்பணியில் முனிராஜை அமர்த்தி உள்ளார். மதக்கலவரத்திற்கு பெயர்போன அலிகரில் எஸ்எஸ்பியாக இருந்த ஆகாஷ் குலாட்டிக்கு பதவி உயர்வு பெற்று டிஐஜியாக பணி ஏற்க உள்ளார்.

இதனால், அவரது பதவியில் தர்மபுரி மாவட்ட ஏ.பாப்பாரப்பட்டி விவசாயக் குடும்பத்தை சேர்ந்த முனிராஜ் அமர்த்தப்பட்டுள்ளார். இவர் வேளாண் கல்வியில் பட்டமேற்படிப்பு முடித்த பின். கடந்த 2009 இல் ஐபிஎஸ் பெற்றவர்.

உ.பி. மாநில அதிகாரியான முனிராஜ் உ.பி.யின் சிறப்புக் காவல் படைடான பிஏசியின் முராதாபாத் 24 ஆவது பட்டாலியனின் கமாண்டராக உள்ளார். உ.பி.யின் பதட்டமான மாவட்டங்களான காஜியாபாத், மாவ், புலந்த்ஷெஹர் மற்றும் பரேலியில் திறம்படப் பணியாற்றி பெயர் எடுத்தவர்.

தனது பரேலி பணியில், முஸ்லிம்களின் முஹர்ரம் ஊர்வலத்தில் உருவாக இருந்த கலவரத்தை தடுத்து நிறுத்தி இருந்தார். இதற்காக பரேலிவாசிகளால் ‘உ.பி. சிங்கம்’ எனும் பெயரில் முனிராஜை பாராட்டி சுவரொட்டிகள் ஒட்டி மகிழ்ந்தனர்.

இதற்கு அவர் பரேலியின் பாஜக எம் எல் ஏ மீது வழக்கு பதிவு செய்ததும் காரணமாக இருந்தது. இதுபோல், தாம் பணியாற்றிய மாவட்டங்களில் ஆளும்கட்சியினர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதிலும் முனிராஜ் தயங்கியதில்லை.

புலந்த்ஷெஹரின் எஸ்எஸ்பியாக இருந்த போது பாஜக, பஜ்ரங்தளம் மற்றும் முதல்வர் யோகி துவக்கிய இந்து யுவவாஹிணி ஆகியவற்றினர் மீதும் பல்வேறு காரணங்களுக்காக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்திருந்தார்.

உ.பி.யில் புதிதாக அமைந்த பாஜக ஆட்சியில் கிரிமினல்கள் மீதான என்கவுண்டரை முதல் அதிகாரியாக புலந்த்ஷெஹரில் செய்திருந்தார். இதற்காக அவருக்கு 2018 ஆம் ஆண்டில் உ.பி. மாநில அரசின் சார்பில் விருது வழங்கப்பட்டிருந்தது.

மத்திய அரசின் கீழ் செயல்படும் பழம்பெரும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாணவர்களும், ஆசிரியர்களும் தனித்தனியாகப் போராடி வருகிறார்கள். அலிகர் நகரின் பெண்களும் டெல்லியின் ஷாஹீன்பாக் போல் ஷாஜாமால் எனும் இடத்தில் கூடி போராடுகின்றனர்.

அன்றாடம் நடைபெறும் இதை முடிவிற்கு கொண்டுவர உ.பி. அரசு விரும்புகிறது. இந்த சூழலில் அலிகர் எஸ்எஸ்பியாகப் பொறுப்பேற்கும் முனிராஜுக்கு அப்பதவி பெரும் சவாலாக இருக்கும் எனக் கருதபப்டுகிறது.

தமிழகத்திற்கும் உதவி

கடந்த வருடம் செப்டம்பரில் ரூ.44 லட்சம் மதிப்பில் கோவையின் தங்கநகைகளும் மீட்கப்பட்டு, கொள்ளையர்களை கைது செய்ததில் முனிராஜ் பெரும்பங்கு ஆற்றியிருந்தார். இதற்கு முன்பும் கோவையில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.75 லட்சம் மதிப்பிலான நகைகளின் உ.பி. கொள்ளையர்களையும் கைது செய்து தமிழகத்தில் ஒப்படைத்திருந்தார் முனிராஜ்.

தமிழர்கள் மீது யோகியின் தனிக்கவனம்

உ.பி. ஐபிஎஸ் அதிகாரிகளில் எட்டு பேர் தமிழர்களாக உள்ளனர். இவர்களில் இருவர் மட்டுமே மூத்தவர்கள். இளைய அதிகாரிகளான மற்றவர்கள் அனைவரையும் உ.பி.யின் பதட்டமான, கிரிமினல் குற்றங்கள் அதிகமுள்ள மாவட்டங்களில் முதல்வர் யோகி தனிக்கவனம் எடுத்து அமர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

U.p.தமிழ் அதிகாரிகள்அலிகர்உ.பி. முதல்வர்யோகிமுனிராஜ்மாவட்ட எஸ்எஸ்பிமுனிராஜ்.ஐபிஎஸ்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author