ரூ.12 லட்சம் கோடி மதிப்பிலான 3,500 டன் தங்கம்: உ.பி.யில் இரு வேறு இடங்களில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு

ரூ.12 லட்சம் கோடி மதிப்பிலான 3,500 டன் தங்கம்: உ.பி.யில் இரு வேறு இடங்களில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு
Updated on
1 min read

உ.பி..யில் 3,500 டன் தங்கம் உள்ளடக்கிய இரண்டு தங்கச் சுரங்கங்களை இரு வேறு இடங்களில் இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் கண்டறிந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சோன்பத்ரா மாவட்டம் மேற்கில் மத்தியப் பிரதேசம், தெற்கில் சத்தீஸ்கர், தென்கிழக்கில் ஜார்கண்ட் மற்றும் கிழக்கில் பிஹார் ஆகிய நான்கு மாநிலங்களை எல்லையாகக் கொண்டது.

இயற்கை எழில்மிக்க இம்மாவட்டம் விந்திய மலைகள் மற்றும் கைமூர் மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. பாக்சைட், சுண்ணாம்பு, நிலக்கரி, தங்கம் போன்ற ஏராளமான தாதுக்கள் உள்ளன. ஏராளமான மின் உற்பத்தி நிலையங்கள் இருப்பதால் சோன்பத்ராவை "இந்தியாவின் எரிசக்தி மூலதனம்" என்று அழைக்கின்றனர். தற்போது இங்கு மிக பிரமாணடமான தங்கச் சுரங்கங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சோன்பத்ரா மாவட்ட சுரங்க அதிகாரி கே.கே.அதிகாரி கூறியதாவது:

உத்தரபிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் 3,500 டன் தங்க உள்ளதை இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் கண்டறிந்துள்ளது. மாவட்டத்தின் சோன் பஹாடி மற்றும் ஹார்டி பகுதிகளில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தாதுக்கள் நிறைந்த பகுதி என்பதால் கடந்த இருபதாண்டுகளாக இங்குள்ள நிலத்தில் பல்வேறு சோதனைகள் நடைபெற்று வருகின்றன. தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரண்டு தொகுதிகளையும் இ-டெண்டரிங் மூலம் ஏலம் விடுதல் விரைவில் தொடங்கப்படும்.

சோன் பஹாடியில் தங்கத்தின் இருப்பு 2943.26 டன் எனவும் ஹார்டி தொகுதியில் 646.16 டன் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ .12 லட்சம் கோடி. இது உத்தரபிரதேச மாநிலத்தின் தற்போதைய பட்ஜெட்டில் இரண்டரை மடங்கு ஆகும்.

இ-டெண்டரிங் மூலம் தொகுதிகள் ஏலம் எடுப்பதற்காக நிர்வாகம் 7 ​​பேர் கொண்ட குழுவைத் மாநில அரசு நியமித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in