

படேல் சமூகத்தினரை ஓ.பி.சி. பிரிவில் இணைக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள், இட ஒதுக்கீடு முறையை முழுதும் ரத்து செய்ய வேண்டும் என்பது எங்கள் விருப்பமல்ல என்று படேல் சமூக எழுச்சிகர்த்தாவான ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார்.
படேல் சமூகத்தினரை ஓபிசி பிரிவில் சேர்க்க வேண்டும், இல்லையேல் இட ஒதுக்கீட்டையே ரத்து செய்ய வேண்டும் என்று ஹர்திக் கூறியது பற்றி எழுந்த கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார். மேலும் பேச்சுவார்த்தைகள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் பேட்டியில் அவர், "இந்த நாட்டை இடஒதுக்கீட்டு முறையில் இருந்து விடுவியுங்கள்... இல்லாவிட்டால், மக்கள் அனைவரும் இடஒதுக்கீட்டுக்கு அடிமைகளாக கிடப்பர்” என்றும் "வேலைவாய்ப்புகள் பட்டியல் இனத்தவரால் பறித்துக் கொள்ளப்படுகிறது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடி இனத்தவருக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் பொதுப் பிரிவிலும் வேலை பெறுகின்றனர்.
எனவே, இந்த அரசு ஒன்று இடஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இல்லையேல் படேல் சமூகத்தினரை ஓ.பி.சி. பிரிவில் இணைக்க வேண்டும். இரண்டில் ஒரு முடிவை அரசாங்கம் எடுக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது" என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால், தற்போது அவர் கூறும்போது, “நான் தற்போது டெல்லி சென்று குஜ்ஜார் சமூகத்தினரை சந்தித்து எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த ஆதரவு கோரப்போகிறேன்.
இப்போதைக்கு தேசிய அளவில் இந்தப் போராட்டத்தைக் கொண்டு செல்வது பற்றி கூற முடியாது, ஏனெனில் அதற்குள் இது பற்றி எதுவும் கூற முடியாது, ஆனாலும் காலமே இதற்கு பதில் சொல்லும்.
எங்களது ஒரே குறிக்கோள், படேல் சமூகத்தினரை ஓ.பி.சி. பிரிவில் சேர்க்கப்பட வேண்டும் என்பதே. எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்.
தற்போது பேசப்பட்டுவருவது போல், இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பதை நாங்கள் விரும்பவில்லை. படேல் சமூகத்தினரை ஓபிசி பிரிவில் சேர்க்க வேண்டும் என்பதே முதன்மை குறிக்கோள்” என்றார் 22 வயது ஹர்திக் படேல்.