

ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சொகுசுக் கப்பலில் சிக்கிய தனது மகளை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு இளம் பெண் ஒருவரின் தந்தை உருக்கமாக வேண்டியுள்ளார்.
சீனாவின் வூஹான் நகரவாசிகளைத் தாக்கத் தொடங்கிய கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் இதுவரை 2000 உயிர்களைப் பலி கொண்டுள்ளது.
20-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது.
சீனாவுக்கு வெளியே மிக அதிக எண்ணிக்கையில் கரோனா பாதிப்பு கொண்ட இடமாக ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசுக் கப்பல் உள்ளது. இக்கப்பலில் 600 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்தக் கப்பலில் சிக்கியுள்ள தனது 24 வயது மகள் சோனாலி தாக்கரை மீட்டுத்தர அவரின் தந்தை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தை அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், "கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் இருக்கும் கப்பலில் எனது மகள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கரோனா அறிகுறி இல்லை என்றே தெரியவந்துள்ளது.
இந்நிலையில் நோயாளிகள் பலர் இருக்கும் கப்பலில் எனது மகள் நாட்கணக்கில் அடைபட்டிருப்பதால் அவருக்கு நோய் தாக்கும் அச்சுறுத்தல் உள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி முதல் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரை மீட்டுத் தர வேண்டுகிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா போன்ற நாடுகள் தங்களின் மக்களை அந்தக் கப்பலில் இருந்து அப்புறப்படுத்திய நிலையில் இந்தியா ஏன் இன்னும் முன்வரவில்லை என சோனாலியும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையில் ஜப்பானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கூறும்போது, கரோனா பாதிக்கப்பட்ட 10 இந்தியர்களின் உடல்நிலை முன்னேறி வருவதாகத் தெரிவித்தனர்.
டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் 138 இந்தியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.