

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
உதம்பூரில் நேற்று முன்தினம் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற வாகனம் மீது பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர். எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் நடத்திய பதிலடியில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.தப்பியோடிய மற்றொரு தீவிரவாதியை வீரர்கள் உயிருடன் பிடித்தனர்.
பிடிபட்ட தீவிரவாதி பாகிஸ் தானில் இருந்து செயல்படும் லஷ்கர் -இ-தொய்பா தீவிரவாத இயக்கத் தைச் சேர்ந்தவன் என்பதும் பாகிஸ் தானின் பைசலாபாத் நகரைச் சேர்ந்த முகமது நவேத் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் உதம்பூர் தீவிரவாத தாக்குதல் வழக்கு விசாரணையை நேற்று என்ஐஏ ஏற்றுக்கொண்டது. என்ஐஏ ஐஜி சஞ்சீவி குமார் சிங் தலைமையிலான குழு ஜம்முவில் முகாமிட்டு விசாரணையை தொடங்கியுள்ளது. நேற்று அவர் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தினார்.
பிடிபட்ட பாகிஸ்தான் தீவிரவாதி முகமது நவேத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. லஷ்கர் அமைப்பில் 20 வயதுக் குட்பட்ட இளைஞர்கள் பலர் தீவிர வாத பயிற்சி எடுத்து வருகின்றனர். அவர்களை மதரீதியாக மூளைச் சலவை செய்து இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்த அனுப்பி வைக்கின்றனர் என்று அந்த தீவிரவாதி கூறியுள்ளார்.
மேலும், வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்ட எல்லையில் உள்ள முள்வேலியை அறுத்து 5 பேர் கொண்ட குழுவாக இந்தியாவுக்குள் ஊடுருவியதா கவும், அதன் பிறகு இரு பிரிவாக பிரிந்து தாக்குதல் நடத்த முடிவு செய்ததாகவும் கூறியுள்ளார். தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேடுதல் வேட்டையின்போது மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் இரு தீவிரவாதிகள் அதே பகுதியில் வீடு ஒன்றில் பதுங்கியுள்ளதாக தெரிகிறது. அப்பகுதியை ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்துள்ளனர். இவர்களும் நேற்று முன்தினம் பிடிபட்ட தீவிரவாதியுடன் சேர்ந்து பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என்று தெரிகிறது.
இந்தியாவிடம் சிக்கிய தீவி ரவாதி தங்கள் நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்று பாகிஸ்தான் திட்ட வட்டமாக மறுத்துள்ளது.