Published : 22 Feb 2020 08:42 am

Updated : 22 Feb 2020 08:42 am

 

Published : 22 Feb 2020 08:42 AM
Last Updated : 22 Feb 2020 08:42 AM

கர்நாடகாவில் லிங்காயத்து மடத்தின் மடாதிபதியாகிறார் முஸ்லிம் இளைஞர்

lingayat-madam
தலைமை மடாதிபதி முருகராஜேந்திர கோரனேஷ்வர சுவாமியுடன் புதிய மடாதிபதி திவான் ஷெரீஃப் முல்லா

பெங்களூரு

இரா.வினோத்

முஸ்லிம் மக்கள் மீது ஒடுக்குமுறை நடந்து வருவ‌தாக போராட்டங்கள் வெடித்து வரும் வேளையில், கர்நாடகாவில் லிங்காயத்து மடத்தின் அடுத்த மடாதிபதியாக 33 வயதான முஸ்லிம் இளைஞர் அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


கர்நாடகா மாநிலம் கதக் மாவட்டம் அசுதி கிராமத்தில் 350 ஆண்டுகள் பழமையான முருகராஜேந்திர கோரனேஷ்வர லிங்காயத்து மடம் உள்ளது. இதில் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சீர்த்திருத்தவாதி பசவண்ணரின் கருத்துகளை தலைமை மடாதிபதி முருகராஜேந்திர கோரனேஷ்வர சுவாமி பரப்பி வருகிறார்.

இந்நிலையில், கதக்கைச் சேர்ந்த ரஹிமான் முல்லா என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அசுதி மடத்துக்கு வந்து, முருகராஜேந்திர கோரனேஷ்வர சுவாமியின் உரையை கேட்டுள்ளார். அதில் ஈர்க்கப்பட்டு, அடிக்கடி மடத்துக்கு தமது குடும்பத்தினருடன் வந்து லிங்கத்தை அவர் வ‌ழிபட்டுள்ளார். மேலும் 2 ஏக்கர் நிலத்தை அன்பளிப்பாக வழங்கி, பசவண்ணரின் கருத்தியலை பரப்ப கட்டிடமும் கட்டிக் கொடுத்துள்ளார்.

இதனிடையே, 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகன் திவான் ஷெரீஃப் முல்லாவை மடத்தில் தங்கவைத்து பசவண்ணரின் வசனங்களை படிக்க செய்துள்ளார். திவான் ஷெரீஃப் முல்லாவும் சிறப்பான முறையில் பசவண்ணர் மற்றும் அவரது அடியார்களின் வசனங்களையும், கருத்தியலையும் கற்றுத் தேர்ந்தார்.

இதனால் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி தலைமை மடாதிபதி முருகராஜேந்திர கோரனேஷ்வர சுவாமி அவருக்கு தீட்சை வழங்கியுள்ளார். இதையடுத்து, அவர் மடத்திலேயே தங்கி முழு நேரமாக பசவண்ணரின் வசனங்களை பரப்பி வந்துள்ளார்.

இந்நிலையில், அசுதி லிங்காயத்து மடத்தின் அடுத்த மடாதிபதியாக 33 வயதான முஸ்லிம் இளைஞர் திவான் ஷெரீஃப் முல்லா நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டார். இதற்கு பெரும்பாலான லிங்காயத்து மடங்கள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ள நிலையில் இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மடாதிபதி திவான் ஷெரீஃப் முல்லாவுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன. லிங்காயத்து மரபின்படி பிள்ளைப் பெற்றவரை மடாதிபதியாக அறிவிப்பது அரிதான விஷயம் என்பதாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், அசுதி மடத்தைச் சேர்ந்த பக்தர்களும் நிர்வாகிகளும் புதிய மடாதிபதிக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தலைமை மடாதிபதி முருகராஜேந்திர கோரனேஷ்வர சுவாமி கூறியதாவது:

பசவண்ணரின் கொள்கைப்படி எங்களுக்கு சாதி,மதம், மொழி, இன பேதமில்லை. எங்களைப் பொறுத்தவரைக்கும் அனைவரும் சமம். எங்கள் மடத்தின் கதவுகள் எல்லா சமயத்தினருக்கும் திறந்தே இருக்கும். சாதி, மத பேதங்களை நாங்கள் முற்றிலுமாக வெறுக்கிறோம்.

புதிய மடாதிபதியின் அறிவு,திறமை,பக்குவம், ஞானம் ஆகியவற்றை பார்த்தே இந்த வாய்ப்பை வழங்கி இருக்கிறேன். இவரை நியமித்ததன் மூலம் பசவண்ணரின் எண்ணம் நிறைவேறியுள்ளது. எங்கள் மடம் ஒரு முன்மாதிரியாக விளங்குவதில் மகிழ்ச்சி. பசவண்ணரின் தத்துவங்கள் நாட்டின் நன்மைக்கும், எதிர்க்காலத்துக்கும் வழிகாட்டுபவையாக உள்ளன என்றார்.

மடாதிபதி திவான் ஷெரீஃப் முல்லா கூறுகையில், ‘‘நான் மிக எளியவன். எனது மிகச் சிறிய சேவையை அங்கீகரித்து, மடாதிபதி முருகராஜேந்திர கோரனேஷ்வர‌ சுவாமி, என்னைத் தனது குடையின் கீழ் ஏற்றுக் கொண்டார். பசவண்ணர், அடியார்கள் மற்றும் எனது குருக்களின் வழியைப் பின்பற்றி நடப்பேன்'' என்றார்.

அன்பு வாசகர்களே....


வரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசைகர்நாடகாலிங்காயத்து மடம்மடாதிபதிமுஸ்லிம் இளைஞர்Lingayat Madamமுஸ்லிம்முஸ்லிம் மக்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author