

இனி சனிக்கிழமை தோறும் பள்ளிகளுக்கு மாணவர்கள் புத்தகப் பைகளைக் கொண்டு செல்ல வேண்டாம் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர் அசோக் கெலாட்டின் வசம் நிதித்துறை இருப்பதால், அவரே பட்ஜெட் தாக்கல் செய்தார்.
முன்னதாக, சட்டப்பேரவையில் அவர் சில அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ராஜஸ்தான் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், இனி சனிக்கிழமைகளில் புத்தகப் பைகளை கொண்டு செல்ல வேண்டாம். அன்று பாடங்கள் நடைபெறாது. அதற்கு பதிலாக, விளையாட்டு, நாடகங்கள், இலக்கிய வாசிப்பு, நடனம் உள்ளிட்டவற்றில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
அதேபோல், விளையாட்டு திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக, ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெறும் ராஜஸ்தான் மாநிலத்தவர்களுக்கு ரூ.3 கோடி, வெள்ளிப் பதக்கத்துக்கு ரூ.2 கோடி, வெண்கலப் பதக்கத்துக்கு ரூ.1 கோடி என சன்மானம் வழங்கப்படும். இவ்வாறு கெலாட் பேசினார்.