Published : 22 Feb 2020 08:05 AM
Last Updated : 22 Feb 2020 08:05 AM

ஆந்திரா, தெலங்கானாவில் மகா சிவராத்திரி விழா: அதிகாலை முதல் திரளான பக்தர்கள் பங்கேற்பு

என். மகேஷ்குமார்

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மகா சிவராத்திரி விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. சைவத் திருத்தலங்களில் அதிகாலை முதலாகவே பக்தர்கள் குவிந்து சிவனை வழிபட்டனர்.

மகா சிவராத்திரி விழா நேற்று ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு தெலுங்கு மாநிலங்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் வாயுத்தலமாக விளங்கும் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் தற்போது மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் நடந்து வருகிறது.

இதில் 6-ம் நாளான நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு அதிகாலை 2.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. பின்னர் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. விடிய, விடிய காத்திருந்த பக்தர்கள் காளத்தி நாதரையும், ஞான பூங்கோதை தாயாரையும் தரிசித்து வழிபட்டனர்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு காளஹஸ்தி சிவன் கோயில் விழாக்கோலம் பூண்டிருந்தது. கோயில் முழுவதும் 8 டன் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் பழங்கள், காய்கறிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. போக்குவரத்து, பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளையும் காளஹஸ்தி தேவஸ்தானம் சிறப்பாக செய்திருந்தது.

இக்கோயிலில் நேற்று காலை இந்திர விமானத்தில் உற்சவ மூர்த்திகள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பின்னர் நேற்றிரவு சிவபெருமான் நந்தி வாகனத்திலும், ஞான பூங்கோதை தாயார் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளினர். நள்ளிரவு லிங்கோத்பவ தரிசனம் நடைபெற்றது.

இதேபோன்று, ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனா கோயில், திருப்பதி கபிலேஷ்வரர் கோயில், குடிமல்லம் பரசுராமேஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் மகா சிவராத்திரி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திருமலையில் கோகர்பம் அணையில் ஷேத்ர பாலகா அபிஷேகம் நடைபெற்றது. அங்குள்ள சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னர் அங்குள்ள பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.

தெலங்கானா மாநிலத்திலும் பல்வேறு சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மீன் குழம்பு படையல்

ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், தேவுன்னி கும்பா கிராமத்தில் உள்ள பக்தர்கள் நூதன முறையில் மகா சிவராத்திரியை கொண்டாடி வருகின்றனர். நாகவள்ளி, ஜங்காவதி ஆறுகள் சங்கமிக்கும் இந்த இடத்தில், சோமேஸ்வரர் கோயில் உள்ளது. மகா சிவராத்திரி நாளில் கிராம மக்கள் அனைவரும் விரதம் இருக்கின்றனர்.

சுவாமியை தரிசித்து விட்டு, வீட்டுக்கு திரும்பிய பிறகு, மீன் குழம்புடன் சமைத்து, சுவாமிக்கு படையல் போட்டு வழிபடுகின்றனர். இது காலம் காலமாக தொடரும் மரபு என அந்த கிராமத்தினர் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x