Last Updated : 21 Feb, 2020 08:34 PM

 

Published : 21 Feb 2020 08:34 PM
Last Updated : 21 Feb 2020 08:34 PM

6 டன் எடை, ரூ.10 கோடி விலை: அதிபர் ட்ரம்பின் தி பீஸ்ட் காரின் சிறப்பு அம்சங்கள் என்ன?

அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் தி பீஸ்ட் கார், ஹெலிகாப்டர் : கோப்புப்படம்

உலக வல்லரசு நாடுகளில் முக்கியமானது அமெரிக்கா. அந்த நாட்டின் அதிபர் எந்த நாட்டுக்குச் செல்லும்போதும் நிச்சயம் எளிமையான முறையில் செல்லமாட்டார். தனது படை பரிவாரங்களுடன், தான் எங்கு செல்கிறோமா அந்த நாட்டு மக்களையே வியக்கும் அளவுக்கு பிரமாண்டத்தை வெளிப்படுத்துவார்கள். பிரமாண்டம் என்று கூறுவதைவிட, உலகையே ஆட்டிப்படைக்கும் அமெரிக்க அதிபருக்கு அளிக்கும் பாதுகாப்பு அம்சங்கள்தான் பிரமாண்டத்தைக்காட்டும்.

அந்த வகையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வருகைக்கு முன்பாகவே அவர் பயன்படுத்தும் கார், விமானம், ஹெலிகாப்டர் உள்ளிட்டவை வந்து சேர்ந்துள்ளன. அதில் முக்கியமானது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பது அவர் மட்டுமே பயன்படுத்தும் தி பீஸ்ட் வகைக் கார் ஆகும்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் தமிழகம் வந்திருந்தபோது, அவர் பயன்படுத்தும் ஹாங்கி ரக காரைக்காட்டிலும் மிகவும் விலை உயர்ந்தது, ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்தது தி பீஸ்ட் வகை கார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரும் 24,25ம் தேதிகளில் இந்தியாவுக்கு இரு நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். முதலில் குஜராத் மாநிலத்துக்குச் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதன்பின் டெல்லி வந்து அமெரிக்கா புறப்படுகிறார். அமெரிக்க அதிபரின் வருகைக்காக அகமதாபாத் நகரம் அழகுபடுத்தப்பட்டு வருகிறது, சுவர்களில் வண்ணம், பளபளக்கும் சாலைகள் எனக் கோடிக்கணக்கில் அகமதாபாத் நிர்வாகம் செலவு செய்து வருகிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பது அவர் பயன்படும் தி பீஸ்ட் ரக கார் ஆகும். அது குறித்த சில முக்கியத் தகவல்களைப் பார்க்கலாம்.

ஜி.எம். மோட்டார்ஸ்

அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் இருந்த காலத்தில் தி சன்ஷைன் ஸ்பெஷல் ரக கார்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், அதிபர் ஜான் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டதற்குப்பின் அதிபரின் பாதுகாப்பில் தனிக்கவனத்தை அமெரிக்க அரசு செலுத்தியது. அவருக்கான பாதுகாப்பு முறைகள் பலஅடுக்குககளாக உயர்த்தப்பட்டது.

1980-ம் ஆண்டிலிருந்து அமெரிக்க அதிபருக்கான பிரத்தியேக காரை ஜிஎம் மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2018-ம் ஆண்டு மாடல் தி பீஸ்ட்( The Beast ) வகைக் காரை பயன்படுத்தி வருகிறார். இந்தக் காரை ஜிஎம் மோட்டார்ஸின் துணை நிறுவனமான தி காடிலாக் நிறுவனம்தான் தயாரிக்கிறது. இந்த காரின் விலை இந்திய மதிப்பில் ரூ.10.70கோடி(15லட்சம் டாலர்).

அதிபர் பயன்படுத்தும் காரை 'தி பீஸ்ட்', 'ஃபர்ஸ்ட் கார்', 'கடிலாக் ஒன்' ஆகிய பெயர்களில் அழைக்கிறார்கள்.

பீஸ்ட் காரின் சிறப்பு அம்சங்கள்

  • அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் தி பீஸ்ட் வகைக் காரின் கதவுகளில் சாவி நுழைப்பதற்கான எந்தவிதமான துளையும் இருக்காது
  • துப்பாக்கிக் குண்டுகள் துளைக்காத வகையில் ஜன்னல் கண்ணாடிகள் 5 இஞ்ச் கணத்தால் 5 அடுக்குகளால் பாலி-கார்பனேட்டால் செய்யப்பட்டவை.
  • கார் ஓட்டுநரின் தனது கண்ணாடியை 3 இன்ஞ்சுக்கு மேல் இறக்க முடியாத அளவுக்கு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

  • காருக்குள் அமர்ந்துவிட்டால் ஒட்டுமொத்தமாக கார் சீல் செய்யப்பட்டுவிடும். கார் மீது ஏவுகணைத் தாக்குதல், துப்பாக்கிச்சூடு, ரசாயன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் என எதன் மூலமும் தாக்குதல் நடத்த முடியாது.
  • அதிபருக்கு அவசர நேரத்தில் அளிக்க ஆக்ஸிஜன் டேங், அதிபரின் ரத்த பிரிவைச் சேர்ந்த ரத்த மாதிரிகள், முதலுதவி பொருட்கள் இருக்கும்.
  • காரின் ஆயில் , பெட்ரோல் டேங்கர் எந்த தாக்குதலுக்கும் உருக்குலையாத வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
  • இரவு நேரத்தில் காரின் விளக்குகளை ஆன்-செய்யாமல் காரை ஓட்டும் வகையில் நைட்-விஷன் சிறப்பு அம்சம் இருக்கிறது
  • காருக்குள் இருந்து கொண்டே வெளியில் இருக்கும் எதிரிகள் மீது துப்பாக்கியால் சுடமுடியும், கண்ணீர்ப் புகைக்குண்டு வீச முடியும்.
  • காரின் கதவுகள் 20 செ.மீ கனமுள்ள அலுமினியம்,டைட்டானியம், ஸ்டீல் ஆகிய உலோகத்தால் செய்யப்பட்டவை
  • டாங்கிகளை வீழ்த்தும் ராக்கெட் லாஞ்சர்கள், கண்ணி வெடி ஆகியவற்றின் மூலம் காருக்கு எந்த சேதமும் விளைவிக்க முடியாது. காரில் உள்ள சென்சார் மூலம் நியூக்கிளியர், கெமிக்கல் மற்றும் பயாலஜிக்கல் தாக்குதல்களையும் எளிதாக கண்டறிந்துவிடலாம்.

  • இந்த காருக்கான டயர்களை குட்இயர் நிறுவனம் தயாரிக்கிறது. பெரும் டிரகக்குகளுக்கு பயன்படுத்தப்படும் டயர்களுக்கான வலிமையை இந்த காருக்கான டயருக்கு வழங்குகிறது. ஒரு சிறிய டிரக் போன்ற வடிவத்தில், எடையில் உலகிலேயே உருவாக்கப்பட்ட ஒரே கார் தி பீஸ்ட் வகைக்கார்தான்.
  • வழக்கமாக இரு பீஸ்ட் கார்கள் அதிபர் அணிவகுப்பில் செல்லும் எந்த காரில் அதிபர் செல்கிறார் என யாருக்கும் தெரியாது.
  • அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் என்ற அமைப்பால் ஓட்டுநருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு சவாலான சூழ்நிலைகளிலும் திறமையாகச் செயல்பட முடியும், தப்புவது குறித்து பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.
  • சாட்டிலைட் ஃபோன் காரில் இருப்பதால், எந்த நாட்டின் அதிபருடனும், அமெரிக்கத் துணை அதிபர் மற்றும் பென்டகனுக்கு காரில் இருந்தவாறு பேசலாம்.
  • காரில் மொத்தம் 7 பேர் அமரலாம். அதிபருடன் 4 பேர் மட்டுமே அமர முடியும். ஓட்டுநருக்கும், அதிபர் இருக்கைக்கும் இடையே இருக்கும் கண்ணாடி தடுப்பை, அதிபரால் மட்டுமே திறக்க முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x