சிஏஏ, என்பிஆர் குறித்து அச்சப்பட வேண்டாம்: பிரதமர் மோடியை சந்தித்தபின் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பேட்டி

பிரதமர் மோடியை இன்று சந்தித்த மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அவரின் மகன் ஆதித்யா தாக்கரே : படம் ஏஎன்ஐ
பிரதமர் மோடியை இன்று சந்தித்த மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அவரின் மகன் ஆதித்யா தாக்கரே : படம் ஏஎன்ஐ
Updated on
1 min read

மகாராஷ்டிரா முதல்வராகப் பதவி ஏற்றபின் முதல் முறையாக பிரதமர் மோடியை இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும், அவரின் மகன் ஆதித்யா தாக்கரேயும் சந்தித்தார்கள்.

குடியுரிமைத் திருத்தச்சட்டம் குறித்தோ, என்பிஆர் குறித்தோ நாட்டில் யாரும் கவலைப்படத் தேவையில்லை, யாரும் நாட்டைவிட்டு அனுப்பப்படமாட்டார்கள் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன், கூட்டணி அமைத்து சிவசேனா போட்டியிட்டது. ஆனால், முதல்வர் பதவியை பகி்ர்ந்து கொள்வதில் ஏற்பட்ட மனக்கசப்பால் இரு கட்சிகளுக்கும் இடையே பிளவு ஏற்பட, கூட்டணியை விட்டு சிவசேனா வெளியேறியது. இதையடுத்து, காங்கிரஸ், என்சிபி ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்த சிவசேனா மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசை அமைத்தது.

முதல்வரானபின் இதுவரை பிரதமர் மோடியை மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சந்திக்காமல் இருந்தார். இந்நிலையில் முதல்முறையாக உத்தவ் தாக்கரேயும், அவரின் மகனும் அமைச்சருமான ஆதித்யா தாக்கரேயும் இன்று சந்தித்துப் பேசினார்கள்.

இந்த சந்திப்புக்குப்பின் முதல்வர் உத்தவ் தாக்கரே நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மகாராஷ்டிரா வளர்ச்சி குறித்து பிரதமர் மோடியுடன் ஆரோக்கியமான முறையில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினேன். மேலும், குடியுரிமைத் திருத்த மசோதா, என்பிஆர், என்ஆர்சி ஆகிய விவகாரங்கள் குறித்தும் பிரதமர் மோடியுடன் ஆலோசித்தேன்.

இந்த ஆலோசனையின் முடிவில், குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை. நாட்டை வி்ட்டு யாரையும் என்பிஆர் மூலம் வெளியேற்றப்படமாட்டார்கள்.

மகா விகாஸ் அகாதி கூட்டணியில் எந்த விதமான உரசலும், விரிசலும் இல்லை. முழுமையாக 5 ஆண்டுகளை நிறைவு செய்யும். மகாராஷ்டிரா வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், நிதிகளையும் வழங்குவதாகப் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in