

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் கலந்து கொள்ளும் ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சிக்காக உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் முழுவீச்சில் தயார் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் அகமதாபாத்துக்கும் புதுடெல்லிக்கும் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வருகை தர உள்ளனர்.
அகமதாபாத்தில் வாகனத்தில் ட்ரம்பும், பிரதமர் மோடியும் பேரணியாக செல்கின்றனர். இரு தலைவர்களுக்கும் அகமதாபாத் மக்கள் வரவேற்பளிக்கின்றனர்.
அகமதாபாத்தில் உள்ள 1.10 லட்சம் இருக்கைகள் கொண்ட மோதேரா மைதானத்தில் நடைபெறும் ‘‘நமஸ்தே ட்ரம்ப்’’ என்ற பெயரி்ல் நடைபெறும் கூட்டத்தில் உரையாற்றுகிறார். அவரது வருகைக்காக பெரிய அளவில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
மோதேரா ஸ்டேடியம் குஜராத் கிரிக்கெட் சங்கத்துக்கு சொந்தமானது. பழைய ஸ்டேடியம் 1982-ம் ஆண்டு 49 ஆயிரம் இருக்கைகளுடன் கட்டப்பட்டது. குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது அந்த ஸ்டேடியத்தை இடித்துவிட்டு பிரமாண்ட ஸ்டேடியம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி 1.10 லட்சம் பேர் அமரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்டேடியம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமாகும். 64 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த ஸ்டேடியம் 700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த ஸ்டேடியத்தில் கிளப் ஹவுஸ், மிகப்பெரிய நீச்சல் குளம், உடைமாற்றும் அறை உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.