Last Updated : 21 Feb, 2020 02:02 PM

 

Published : 21 Feb 2020 02:02 PM
Last Updated : 21 Feb 2020 02:02 PM

மிரளவைக்கும் அம்சங்கள்: அதிபர் ட்ரம்ப்பின் அதிநவீன ‘மரைன் ஒன்’ பிரத்யேக ஹெலிகாப்டர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் இந்திய வருகையையொட்டி அவர் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் இந்தியா வந்துள்ளன. அதிபர் ட்ரம்ப் மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிரத்யேக 'மரைன் ஒன்' ஹெலிகாப்டர் நேற்று அகமதாபாத் வந்து சேர்ந்தது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இருநாட்கள் பயணமாக வரும் 24, 25-ம் தேதி இந்தியா வருகிறார். பிரதமர் மோடியுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ட்ரம்ப், குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் உள்ள மோதிரா கிரிக்கெட் மைதானத்தைத் திறந்து வைக்கிறார்.

உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக மோதிரா மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை திறந்து வைத்தபின் அங்கு நடக்கும் 'ட்ரம்ப் நலமா' எனும் நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப்பும், பிரதமர் மோடியும் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் வருகையையொட்டி அவர் பயன்படுத்தும் பிரத்யேகப் பொருட்கள் ஒன்றன்பின் ஒன்றாக இந்தியா வந்துள்ளன. குறிப்பாக ட்ரம்ப் பயன்படுத்தும் கார்கள், பாதுகாப்பு வாகனங்கள், பாதுகாப்புப் படை வீரர்களின் பொருட்கள், ஹெலிகாப்டர் உள்ளிட்ட பல மிகப்பெரிய ராணுவ விமானமான குளோப் மாஸ்டர் மூலம் அகமதாபாத் வந்துள்ளன.

இதில் குறிப்பாக அமெரிக்க அதிபர் மட்டும் பயன்படுத்தக்கூடிய ஹெலிகாப்டர் மரைன் ஒன் அகமதாபாத் வந்து சேர்ந்துள்ளது. இந்த ஹெலிகாப்ரடர் மூலம்தான் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து மோதிரா கிரிக்கெட் மைதானத்துக்கு அதிபர் ட்ரம்ப் செல்ல உள்ளார்.


அமெரிக்க அதிபர் மட்டுமே பயன்படுத்தும் இந்த மரைன் ஒன் ஹெலிகாப்டரின் முக்கிய சிறப்பு அம்சங்கள்

  • அமெரிக்க விமானப்படையுடன் அதிபரை இணைப்பதுதான் இந்த ஹெலிகாப்டரின் நோக்கமாகும். அமெரிக்க அதிபர் நீண்டதூர தொலைவுக்கு அதிகாரபூர்வ விமானங்கள் பயன்படுகின்றன. குறுகிய தொலைவு செல்வதற்கு மரைன் ஒன் ஹெலிகாப்டர் பயன்படுகிறது.
  • மரைன் ஒன், ஹெலிகாப்டர் என்று சொல்வதைக் காட்டிலும் பல்வேறு வசதிகள் நிரம்பிய வீடு என்று கூறலாம். சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சில்கோர்க்ஸ்கி வகை ஹெலிகாப்டராகும். தற்போது விஹெச்-3 ஸீ கிங் வகை ஹெலிகாப்டரை ட்ரம்ப் பயன்படுத்தி வருகிறார். விரைவில் அதிநவீன விஹெச்-92ஏ பயன்படுத்தப்பட உள்ளது.
  • மரைன் ஒன் ஹெலிகாப்டர் மணிக்கு 241 கி.மீ .வேகத்தில் பறக்க முடியும்.
  • ஹெலிகாப்டரில் ஏவுகணைகள் வீசும் வசதி, ஏவுகணைகள் மறித்துத் தாக்குவது, ரேடார்கள், எச்சரிக்கை கருவி உள்ளிட்ட அம்சங்கள் இருக்கின்றன.

  • மரைன் ஒன் ஹெலிகாப்டருக்குள் 200 சதுர அடி ஓய்வெடுக்கும் அறையும், கழிப்பறையும் உள்ளன. 14 பயணிகள்வரை இந்த ஹெலிகாப்டரில் பயணிக்க முடியும்.
  • மரைன் ஒன் ஹெலிகாப்டரில் மொத்தம் 3 இன்ஜின்கள் இருக்கின்றன. இதில் ஒரு இன்ஜின் பழுதடைந்தாலும் பறக்கமுடியும்.
  • அமெரிக்க அதிபரை எப்போதும் கவுரவிக்கும் வகையில் இந்த ஹெலிகாப்டர் அவரோடு உடன் செல்லும்.
  • இந்த ஹெலிகாப்டரை இயக்குவதற்காகவே மரைன் ஹெலிகாப்டர் ஸ்குவார்டன் ஒன் எனும் படை இருக்கிறது. இந்தப் படையைச் சேர்ந்தவர்கள்தான் இந்த ஹெலிகாப்டரை இயக்கும் பொறுப்பானவர்கள். நைட்வாக்ஸ் என்ற பெயரில் அழைக்கப்படும் வகையில் இந்த ஹெலிகாப்டரில் மொத்தம் 4 பைலட்கள் இருப்பார்கள்.
  • இந்த ஹெலிகாப்டர் ஸ்குவார்டன் ஒன் எனும் படை அமெரிக்க அதிபர், துணை அதிபர், அமைச்சர்களை அழைத்துச் செல்லும் பொறுப்புடையவர்கள்.
  • அதிபரின் மரைன் ஒன் ஹெலிகாப்டரின் பாதுகாப்புக்காக எப்போதும் 5 துணை ஹெலிகாப்டர்கள் உடன் பறந்து செல்லும்.
  • மரைன் ஒன் ஹெலிகாப்டரின் நோக்கமே அமெரிக்க அதிபர் எங்கு சென்றாலும், அதில் உள்ள வீரர்கள் முழு சீருடையில் வரவேற்று மரியாதை செலுத்துவதுதான்.
  • அதிபர் ஹெலிகாப்டருக்குள் இருந்தால், அதன் சத்தம் உள்ளே கேட்காத வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும். மிகுந்த சத்தமாகப் பேசாமல் வழக்கமான குரலிலேயே பேச முடியும். இந்த ஹெலிகாப்டர் ராணுவத்தின் மிகப்பெரிய சி-17 குளோப்மாஸ்டர் விமானத்தின் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x