

பெங்களூருவில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த பேரணியில் மேடை ஏறி 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என முழங்கிய இளம் பெண் அமுல்யாவின் தந்தை தனது மகளின் செய்கைக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்தப் பேட்டியில், "எனது மகள் அமுல்யா அப்படிச் சொல்லியது தவறு. அவள் அண்மைக்காலமாக சில முஸ்லிம் அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளார். அவரை சில முஸ்லிம்கள் தவறாக வழிநடத்துகின்றனர். அவர் எனது பேச்சைக் கேட்பதே இல்லை" என்று கூறினார்.
முன்னதாக, கர்நாடகாவின் பெங்களூரு நகரில் நேற்று (வியாழக்கிழமை மாலை) குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நேற்று நடந்தது. இந்த பேரணியில் அகில இந்திய மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி கலந்து கொண்டார்.
அப்போது, பேரணியில் கலந்து கொண்ட இளம்பெண் அமுல்யா மேடை ஏறி பேசும் போது, 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என முழங்கினார்.
இது தொடர்பாக பெங்களூரு போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் மீது சட்டப்பிரிவு 124 ஏ (தேசத்துரோக வழக்கு), 153 ஏ மற்றும் பி (தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிப்பது) ஆகிய பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக கர்நாடக அமைச்சர் சி.டி.ரவி, "தேசத்துரோகிகள் மன்னிக்கப்படக் கூடாது" என்று கூறியுள்ளார்.