ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் விசாரணை- சிபிஐ, அமலாக்க துறைக்கு மே 4 வரை அவகாசம்

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் விசாரணை- சிபிஐ, அமலாக்க துறைக்கு மே 4 வரை அவகாசம்
Updated on
1 min read

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் விசாரணையை முடிக்க சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு டெல்லி நீதிமன்றம் மே 4-ம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது.

ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3500 கோடி முதலீடு செய்ய மேக்சிஸ் நிறுவனத்ததுக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதிவழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக ப.சிதம்பரம், கார்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் விசாரணை நிலவர அறிக்கையை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 14-ம்தேதி தாக்கல் செய்தன. அமலாக்கத்துறை தனது அறிக்கையில் வழக்கில் தீவிர விசாரணை நடந்து வருவதாக கூறியிருந்தது. சிபிஐ தனது அறிக்கையில், “இந்த வழக்கில் விசாரணைக்கு உதவிடுமாறு மலேசியாவுக்கு கோரிக்கை கடிதம் (எல்ஆர்) அனுப்பப்பட்டுள்ளது. பதிலுக்காக காத்திருக்கிறோம்” என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு சிறப்பு நீதிபதி அஜய்குமார் குஹார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில், “இந்தவழக்கு தொடர்பாக 4 நாடுகளுக்குகோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளோம். பதிலுக்காக காத்திருக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ப.சிதம்பரம், கார்த்தி ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணையை முடிக்க சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு மே 4 வரை அவகாசம் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே இந்த வழக்கில்ப.சிதம்பரம், கார்த்தி ஆகியோருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு மார்ச் 4-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in