

அமராவதி: ஆந்திர மாநிலம், அமராவதியில் நீருகொண்டா பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலையில் நேற்று நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்பதற்காக நகரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், தொழில்துறை வளர்ச்சிக் கழகத் தலைவருமான ரோஜா காரில் சென்றார். இதை அறிந்த அமராவதி விவசாயிகள், பெண்கள் உள்ளிட்டோர் அவரது காரை வழி மறித்தனர். ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் தேவையில்லை என்றும், மாநிலத்தில் மையத்தில் உள்ள அமராவதியே நிரந்தர தலைநகரமாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் அப்போது கோஷமிட்டனர். இதனால் காரிலேயே சுமார் ஒரு மணிநேரம் வரை ரோஜா அமர்ந்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் ரோஜா கூறியதாவது:
தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சமூக விரோதிகளை சந்திரபாபு நாயுடு கட்டவிழித்து விட்டுள்ளார். இவர்கள் அமராவதி கிராமங்களில் மக்களை தூண்டிவிட்டு போராட்டம் செய்து வருகின்றனர். மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே முதல்வர் ஜெகன்மோகனின் குறிக்கோள். அதற்காகவே 3 பகுதிகளில் தலைநகரங்களை அமைக்க வேண்டுமென அவர் கூறியுள்ளார். ஆனால், அமராவதியில் சந்திரபாபு நாயுடுவின் ஜாதி பிரிவை சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர். அவர்களுக்காகவே அங்கு அமராவதி நகரை உருவாக்கி அதனை தலைநகரமாக அவர் அறிவித்தார். அமராவதியில் சந்திரபாபு நாயுடு சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பினாமி பெயர்களில் வாங்கி குவித்துள்ளார்.ஆதலால், தற்போது தலைநகரை மாற்றப்போகிறோம் என அறிவிப்பு வந்த உடன், சந்திரபாபு நாயுடு பதற்றமடைந்து இருக்கிறார். இவ்வாறு ரோஜா கூறினார்.