Published : 20 Feb 2020 09:46 PM
Last Updated : 20 Feb 2020 09:46 PM

மோடியும், அமித் ஷாவும் அனைத்து சட்டப்பேரவைத் தேர்தலிலும் உதவ மாட்டார்கள்: டெல்லி தேர்தல் குறித்த ஆர்எஸ்எஸ் நாளேடு ஆய்வில் தகவல்

பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அனைத்து சட்டப்பேரவைத் தேர்தலிலும் உதவமாட்டார்கள் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் நாளேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் நாளேடான தி ஆர்கனைஸர் நடத்திய ஆய்வு குறித்து தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில் இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் 62 இடங்களைக் கைப்பற்றி அரவிந்த் கேஜ்ரிவால் மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றினார். கடந்த முறை 3 இடங்களை வென்ற பாஜக இந்தமுறை சற்று முன்னேறி 8 இடங்களைக் கைப்பற்றியது.

இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி குறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் தி ஆர்கனைஸர் நாளேடு ஆய்வு நடத்தி தலையங்கம் எழுதியுள்ளது. அதில் " டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் தோல்விக்கு இரு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. முதலாவது கடந்த 2015-ம் ஆண்டுக்குப்பின் பாஜக அடிமட்டத்தில் இருந்து கட்சியை வலுப்படுத்துவதில் தோல்வி அடைந்துவிட்டது. இரண்டாவது, கடைசி நேரத்தில் பிரச்சாரத்தில் பாஜகவினர் கோட்டைவிட்டது ஆகியவை தோல்விக்குக் காரணமாகும்.

அனைத்து சட்டப்பேரவைத் தேர்தலிலும் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் உதவமாட்டார்கள். டெல்லியில் வேறுவழியில்லை கட்சியை அடிமட்டத்தில் இருந்து வலுப்படுத்துவது அவசியம். டெல்லி மக்களின் எண்ணங்களை அறிந்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும்.

டெல்லியில் 1700 அங்கீகாரமற்ற குடியிருப்புகளுக்கு அங்கீகாரம் அளித்து, 40 லட்சம் மக்கள் பெறும்வகையில் பாஜக வாக்குறுதி அளித்ததும் பயனில்லை. ஏராளமான மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் பிரச்சாரம் செய்தும், கேஜ்ரிவாலுக்கு எதிராக நேரடியாக முதல்வர் வேட்பாளரை நிறுத்த தவறவிட்டது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவர்கள் பிரச்சாரம் செய்யத் தேர்தல் ஆணையம் தடைவிதித்தது. முதல்வர் கேஜ்ரிவாலை தீவிரவாதி என மத்திய அமைச்சர் அழைத்தது போன்றவை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x