

தேசவிரோத வழக்கில் பெங்களூருவில் கைது செய்யப்பட்ட 3 காஷ்மீரி மாணவர்களின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.3 லட்சம் பரிசளிப்பதாக கர்நாடகாவின் ராமசேனா அமைப்பின் தலைவர் சித்தலிங்க சுவாமி என்பவர் கூறியதாகக் கருதப்படும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அவர் கன்னட மொழியில் கூறியதை மொழிபெயர்த்து இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டது, அதில் அவர், இந்தியாவினால் வளர்த்தெடுக்கப்பட்டு பாகிஸ்தான் வாழ்க என்று கோஷமிடுபவர்கள் இன்று சிறையில் இருக்கிறார்கள், இவர்களது நாக்கை அறுப்பவர்களுக்கு மொத்தமாக ராமசேனா ரூ. 3 லட்சம் வெகுமதி அளிக்கும் என்று பேசியதாகக் கூறப்பட்டுள்ளது.
காதலர் தினங்களில் காதலர்களை அடித்து உதைப்பதாக ராம சேனா அமைப்பு மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 2009-ல் மதுபான விடுதிகளுக்குச் செல்லும் பெண்களை துரத்திப் பிடித்து முடியைப் பிடித்து இழுத்து அடித்ததான குற்றச்சாட்டில் ராமசேனா உறுப்பினர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டது குறிப்ப்பிடத்தக்கது.
தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களான 3 காஷ்மீரி மாணவர்கள் சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ஹூப்ளி பார் அசோசியேஷன் வழக்கறிஞர்கள் இந்த 3 காஷ்மீரி மாணவர்களுக்காக ஆஜராகப் போவதில்லை என்று முடிவெடுத்திருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.