Last Updated : 20 Feb, 2020 07:41 PM

 

Published : 20 Feb 2020 07:41 PM
Last Updated : 20 Feb 2020 07:41 PM

மாநிலவாரியாக மக்கள் தொகை அடிப்படையில் சிறுபான்மையினரை கணக்கெடுக்க நெறிமுறைகள் கோரி மனு: உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

மாநிலவாரியாக மக்கள் தொகை அடிப்படையில் கணக்கெடுத்து சிறுபான்மையினரை முடிவு செய்ய வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கக் கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று மறுத்துவி்ட்டது.

அதேபோன்று சிறுபான்மை என்ற வார்த்தைக்கும் விளக்கம் அளிக்கவும் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

பாஜக தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், லட்சத்தீவுகள், மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் ஆகிய 8 மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். ஆனால் அவர்களுக்கான சட்டப்பூர்வ சலுகைகள் பெரும்பான்மையினரால் தன்னிச்சையாக உறிஞ்சப்படுகின்றன. மாநில அளவில் அவர்களைச் சிறுபான்மையினராக அடையாளம் காணாதது அல்லது அறிவிக்காததே இதற்கு காரணம்.

2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 8 மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். ஜம்மு காஷ்மீர் 28.44%, பஞ்சாப் 38.40%, லட்சத்தீவுகள் 2.5%, மிசோரம் 2.75%, நாகாலாந்து 8.75%, மேகாலயா 11.53%, அருணாச்சல பிரதேசம் 29%, மணிப்பூர் 31.39% என்ற அளவில் இந்துக்கள் உள்ளனர்.

காஷ்மீர் ( 68.30% ), லட்சத்தீவுகள் (96.20) ஆகிய இரு மாநிலங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். அசாம் (34.20%), மேற்கு வங்கம் (27.5%), கேரளா (26.60%), உ.பி. (19.30), பிஹார் (18%) ஆகிய மாநிலங்களில் முஸ்லிம்கள் குறிப்பிடத்தகுந்த அளவில் உள்ளனர். ஆதலால், மாநில அளவில், மக்கள் தொகை அடிப்படையில் சிறுபான்மையினரை கணக்கெடுக்க வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எப். நாரிமன்,எஸ்.ரவிந்திர பாட் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் ஆஜராகினார். அவர் வாதிடுகையில், " மைனாரிட்டி(சிறுபான்மை) என்ற வார்த்தைக்குச் சரியான விளக்கத்தை நீதிமன்றம் வழங்க வேண்டும். 2002-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, மாநில வாரிய மக்கள்தொகை அடிப்படையில் சிறுபான்மையினரைக் கணக்கெடுக்க வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க வேண்டும்.

அரசியலமைப்புச்சட்டம் 29, 30 பிரிவுகளில் மைனாரிட்டி எனும் வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால், அதற்கான விளக்கம் இல்லை.2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி காஷ்மீர் உள்ளிட்ட 8 மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்

இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதிகள் நாரிமன், ரவிந்திர பாட், " இந்த மனுவை எங்களால் விசாரிக்க முடியாது. உரிய அமைப்பிடம் சென்று நிவாரணம் பெறலாம். மனுதாரருக்குத் தீர்வு ஏதேனும் தெரிந்தால் வேறு எங்காவது முறையிடலாம் உச்ச நீதிமன்றம் விசாரிக்காது. இரு வாய்ப்புகள் மனுதாரருக்கு அளிக்கிறோம். மனுவை நாங்கள் தள்ளுபடி செய்கிறோம் அல்லது மனுதாரர் மனுவை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம்" எனத் தெரிவித்தார்

இதைக்கேட்ட மனுதாரர் வழக்கறிஞர், மனுவை வாபஸ் பெற்றுக் கொள்ளவதாகவும், உரிய அமைப்பை சுதந்திரமாக அணுக விருப்பம் இருப்பதாகவும் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x