Last Updated : 20 Feb, 2020 06:02 PM

 

Published : 20 Feb 2020 06:02 PM
Last Updated : 20 Feb 2020 06:02 PM

'பாசிஸம், நாசிஸத்தோடு தேசியவாதத்தை சிலர் ஒப்பிடுகிறார்கள்': மோகன் பாகவத் வேதனை

தேசியவாதம் எனும் வார்த்தை முற்றிலும் வித்தியாசமானது, ஆனால், பாசிஸம், நாசிஸத்தோடு தேசியவாதத்தைச் சிலர் ஒப்பிடுகிறார்கள் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் வேதனை தெரிவித்தார்.

ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

தேசியவாதம் எனும் வார்த்தை முற்றிலும் வித்தியாசமான வார்த்தை. ஆனால், சிலர் தவறான அர்த்தம் கற்பிக்கிறார்கள்.

நான் இங்கிலாந்துக்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்தேன். அப்போது ஆர்எஸ்எஸ் தொண்டர் ஒருவர் என்னிடம் வந்து சில அறிவுரைகளை எனக்கு வழங்கினார்.

அதாவது இங்கிலாந்தில் ஆங்கிலத்தில் 'நேஷனலிஸம்' (தேசியவாதம்) என்ற வார்த்தையை இங்குப் பயன்படுத்தாதீர்கள். இங்கு நேஷனலிஸம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் வேறுமாதிரி இருக்கிறது.

நீங்கள் இனத்தைப் பற்றிப் பேசலாம், தேசத்தைப் பற்றி பேசலாம், அதன் அம்சங்களைப் பற்றிப் பேசலாம் ஆனால், தேசியவாதம் பற்றி பேசாதீர்கள். ஏனென்றால், தேசியவாதம் எனும் வார்த்தை ஹிட்லரின் நாசிஸம், பாசிஸத்தோடு தொடர்புப்படுத்தி இங்கிலாந்தில் பார்க்கப்படுகிறது என்று என்னிடம் தெரிவித்தார்.

பருவநிலை மாற்றம், முற்போக்கு வாதம் ஆகியவைதான் இன்று உலக அமைதியைக் கெடுக்கும் வகையில் இருக்கின்றன. இந்தியாவால் மட்டுமே முழுமையான சிந்தனை, நெறிமுறைகளுடன் தீர்வை வழங்க முடியும். ஆதலால் உலகம் இந்தியாவுக்காகக் காத்திருக்கிறது, இந்தியா மிகப்பெரிய நாடாக உருமாறும்.

வேறுபட்ட நாடுகளில் வேறுபட்ட மொழிகள், மதங்கள், பொருளாதார மேம்பாட்டு மாதிரிகள் இருந்தபோதிலும் அதை ஏற்காத ஒருவர் தேசியவாதியாக இருக்க முடியாது.

மதம், மொழி, பிராந்தியம் வேறுபாடு பார்க்காமல் மக்களோடு ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் இணைந்திருக்க வேண்டும்.

வாசுதேவ குடும்பம்(உலகமே குடும்பம்) என்ற கொள்கையைப் பின்பற்றும் இந்தியாவின் குணம் என்பது ஒவ்வொருவரும் பணிவுடன் நடப்பது. இந்தியர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருத்தருக்காக வாழ்கிறோம், நமக்காக வாழவில்லை.

இந்த உலகம் நம்மைப் படைத்தது, அதற்குத் திருப்பிச் செலுத்த வேண்டும் என நம்புகிறோம். நன்றி உணர்வுடன் இந்த உலகைப் பார்க்கிறோம்.

இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் ஹஜ் புனித யாத்திரை சென்றிருந்தார். அவர் கழுத்தில் நகை அணிந்தமைக்காக அவர் மீது அவதூறு குற்றம்சாட்டப்பட்டது. அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ் தலையிட்டு, 8 நாட்களில் விடுவித்தார். ஆதலால் இந்தியாவில் இருந்து வரும் ஒவ்வொருவரும் மற்ற நாடுகளில் இந்துவாகவே பார்க்கப்படுகிறார்கள்.

ஏனென்றால், இந்தியக் கலாச்சாரம் என்பது, இந்து கலாச்சாரம் என்று அறியப்படுகிறது. இந்து மதத்தின் மதிப்புகள், கலாச்சாரம், நம்பிக்கைகளை எடுத்துக்கூறுகிறது

மகாபாரதத்தில் இளவரசர் யுதிஷ்டிரர் கூறுவதைப்போல், இந்தியாவுக்கு மற்ற நாடுகளை அடிமைப்படுத்துவதில் நம்பிக்கை இல்லை, அதன் கொள்கை என்பது, நாங்கள் யாருக்கும் அடிமையில்லை, எங்களுக்கும் யாரும் அடிமையில்லை என்பதே.

இவ்வாறு மோகன் பாகவத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x