

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை விரைவாக அமல்படுத்த வலியுறுத்தி 2 முன்னாள் ராணுவ வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று தொடங்கினர்.
இதுகுறித்து முன்னாள் ராணுவ வீரர்கள் இயக்கத்தின் ஐக்கிய முன்னணியின் ஊடக ஆலோசகர் கர்னல் அனில் கவுல் (ஓய்வு) நேற்று கூறும்போது, “கர்னல் புஷ்பேந்தர் சிங் (ஓய்வு) மற்றும் ஹவில்தார் மேஜர் சிங் (ஓய்வு) ஆகிய இருவரும் சாகும்வரை உண்ணா விரதத்தைத் தொடங்கி உள்ளனர்” என்றார்.
வெவ்வேறு காலகட்டத்தில் ஒரே பதவி வகித்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம் ஒரே மாதிரி வழங்கப்படுவதில்லை.
எனவே, ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது முன்னாள் ராணுவ வீரர்களின் நீண்டகால கோரிக்கை. இந்நிலையில், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த திட்டத்தை அமல்படுத்த ஒப்புக்கொண்டது. ஆனால் இது காலதாமதமாகி வருகிறது.
இதையடுத்து, முன்னாள் ராணுவ வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த திட்டத்தை அமல்படுத்துவது பற்றிய தெளி வான அறிவிப்பு பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில் இடம்பெறவில்லை. மாறாக, இது குறித்த பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளதாக மோடி தெரிவித்துள்ளார்.
இதனால், அதிருப்தியடைந்த முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர். இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் சுமார் 22 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் போரினால் கணவனை இழந்த 6 லட்சம் விதவைகள் பயனடைவர்.