Last Updated : 20 Feb, 2020 01:06 PM

 

Published : 20 Feb 2020 01:06 PM
Last Updated : 20 Feb 2020 01:06 PM

நிதிஷ் குமாருக்குப் போட்டியா? 10 கோடி இளைஞர்களைத் திரட்டும் பிரசாந்த் கிஷோர்; இன்று பிரச்சாரம் தொடக்கம்

ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரும், அரசியல் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர், பிஹார் மாநிலத்தில் 10 கோடி இளைஞர்களைத் திரட்டும் வகையில் தொடர்ந்து 100 நாட்கள் பிரச்சாரத்தை இன்று தொடங்குகிறார்.

இந்த ஆண்டு இறுதியில் பிஹார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நிலையில், முதல்வர் நிதிஷ் குமாருக்கு எதிராக பிரசாந்த் கிஷோர் காய் நகர்த்துகிறாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

'பாத் பிஹார் கி' என்ற பெயரில் அதாவது, பேச்சு பிஹாரைப் பற்றியது என்ற கோஷத்தோடு பிரசாந்த் கிஷோர் இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார். அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் பிஹார் மாநிலத்தை நாட்டில் முதல் 10 வளர்ச்சி அடைந்த மாநிலங்களின் பட்டியலில் கொண்டுவருவதன் நோக்கம்தான் அந்தப் பிரச்சாரத்தின் கருப்பொருளாகும்.

பிஹாரின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு அனைத்து இளைஞர்களும் இந்தப் பிரச்சாரத்தில் பங்கேற்று தங்கள் பங்களிப்பை அளிக்கலாம்.

இதற்காக பிரசாந்த் கிஷோர் www.baatbiharki.in என்ற இணையதளத்தையும் தொடங்கியுள்ளார். இந்த இணையதளத்தில் பிஹார் மாநிலத்தை முன்னேற்றுவதற்குத் தேவையான ஆலோசனைகளை இளைஞர்கள் வழங்கலாம். அதேபோல இந்தப் பிரச்சாரத்தில் இணைய விருப்பம் உள்ள இளைஞர்கள் 6900869008 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தங்கள் விவரங்களைத் தெரிவித்து பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக இருந்த பிரசாந்த் கிஷோர், சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீருக்கான 370-வது பிரிவு நீக்கம், என்ஆர்சி, என்பிஆர் போன்றவற்றில் நிதிஷ் குமார் ஆதரவு அளித்தது பிரசாந்த் கிஷோருக்குப் பிடிக்கவில்லை.

இதனால் மிகுந்த அதிருப்தியுடன் இருந்த பிரசாந்த் கிஷோர் வெளிப்படையாகவே நிதிஷ் குமாரைக் கொள்கை ரீதியாக விமர்சித்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே விரிசல் அதிகமாக, பிரசாந்த் கிஷோரைக் கட்சியில் இருந்து நீக்கி நிதிஷ் குமார் அறிவித்தார்.

இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரசாந்த் கிஷோர் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது நிதிஷ் குமார் மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன் என்று தொடக்கத்தில் கூறிய பிரசாந்த் கிஷோர் அவரைக் கடுமையாக வறுத்தெடுத்தார்.

நிதிஷ் குமார் மகாத்மா காந்தியின் கொள்கையையும், கோட்சேவின் கொள்கையையும் ஒரேநேரத்தில் பின்பற்ற முடியாது. பாஜக கூட்டணியில் விருப்பம் இருந்தால் இருக்கலாம் ஆனால், போலித்தனமாக காந்தியக் கொள்கையை பின்பற்றக்கூடாது என்று பிரசாந்த் கிஷோர் விமர்சித்தார்.

பிஹாரை முன்னேற்றுவேன் என்ற முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்த நிதிஷ் குமார், முன்னேற்றுவதற்கான எந்தப் பணியையும் செய்யவில்லை. மாநிலத்தின் முன்னேற்றம் குறித்து தன்னுடன் நிதிஷ் குமார் விவாதிக்கத் தயாரா என்று பிரசாந்த் கிஷோர் சவால் விடுத்தார். இதனால், நிதிஷ் குமாருக்கு எதிரான காய் நகர்த்தல்களை பிரசாந்த் கிஷோர் அரசியலில் மறைமுகமாகத் தொடங்கிவிட்டார் என்று அரசியல் களத்தில் பேசப்பட்டது.

அதன் முதல்படியாக, மாநிலத்தில் வளர்ச்சியை முன்னிறுத்தி, இளைஞர்களை ஒன்று திரட்டும் பணியை பிரசாந்த் கிஷோர் தொடங்கியுள்ளார். இது மாநிலத்தின் வளர்ச்சிக்கான பிரச்சாரம் என்று வெளிப்படையாகப் பார்க்கப்பட்டாலும், வரும் தேர்தலில் நிதிஷ் குமாரை அரியணையில் இருந்து இறக்குவதற்கான முதல் முயற்சியாகப் பார்ப்பதாகவே அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x