

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரில் ஒருவரான வினய் சர்மா சிறையில் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டார்.
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்ஷய் குமார் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
வரும் மார்ச் 3-ம் தேதி இவர்களை தூக்கிலிட புதிய தேதியை டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதையடுத்து குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகளை திஹார் சிறை நிர்வாகம் செய்துவருகிறது.
இந்நிலையில், குற்றவாளிகளுள் ஒருவரான வினய் சர்மா, சிறையில் தன்னைத் தானே காயப்படுத்தியுள்ளார். அறையில் உள்ள சுவரில் தனது தலையை மோதியதால் அவருக்கு தலை மற்றும் கையில் சிறு காயம் ஏற்பட்டுள்ளதாக சிறைத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 16-ம் தேதி இச்சம்பவம் நடந்த நிலையில் தற்போது வெளியில் தெரிய வந்துள்ளது. வினய் சர்மாவுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டிருக்கிறது. அவர் உடல்நலன் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தூக்கு தண்டனையிலிருந்து தப்பிக்க வினய் சர்மா எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், அவர் தன்னைத் தானே தாக்கிக் கொண்டிருக்கலாம் என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
நல்ல உடல்நிலையில் இருப்பவர்களை மட்டுமே தூக்கிலிட முடியும் என்பதால் அதனைத் தாமதப்படுத்த அவர் இவ்வாறு செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
குற்றவாளிகள் 4 பேரும் 24 நேரமும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.