Published : 20 Feb 2020 10:05 AM
Last Updated : 20 Feb 2020 10:05 AM

அவிநாசி விபத்து; கேரள மருத்துவக் குழு விரைந்தது; பினராயி விஜயன் உத்தரவு

அவிநாசி அருகே கேரள மாநில அரசு பேருந்து லாரி மீது விபத்துக்குள்ளனது குறித்து விவரங்களை கேட்டறிந்த கேரள முதலவர் பினராயி விஜயன், முதல் மருத்துவக்குழுவை அனுப்பி வைத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, இன்று (பிப்.20) அதிகாலை 3.30 மணியளவில் சேலத்திலிருந்து கேரள மாநிலம் ஆலப்புழா நோக்கிச் சென்று கொண்டிருந்த கேரள அரசு சொகுசுப் பேருந்தும் கேரளாவிலிருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்தக் கோர விபத்தில் சிக்கிய பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், அந்த வழியாகச் சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் போராடி பேருந்து விபத்தில் சிக்கியவர்களையும் உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 48 பேரில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்களை திருப்பூர் அரசு மருத்துவமனையிலும் கோவை தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றியும் 12 பேர் உயிரிழந்தனர். இதனால், இந்தக் கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

இந்தநிலையில் விபத்துக்குள்ளான பேருந்து கேரளாவைச் சேர்ந்தது என்பதால் இதுகுறித்து விவரங்களை கேரள முதல்வர் பினராயி விஜயன் கேட்டறிந்தார். மேலும் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை கேரளாவுக்கு அழைத்து வர உடனடியாக மருத்துவக்குழுக்களை அனுப்பி வைக்கவும் பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து முதல் மருத்துவக்குழு அவிநாசிபுறப்பட்டுச் சென்றது. இதற்கான நடவடிக்கையை பாலக்காடு மாவட்ட ஆட்சியர் எடுத்துள்ளார். இதுமட்டுமின்றி பேருந்து விபத்து குறித்து விசாரணை நடத்தவும், உதவி பணியில் ஈடுபடவும் மாநில போக்குவரத்துறை அமைச்சர் சசிதரன் கேரள போக்குவரத்துக்கழக குழுவினரை தமிழகம் அனுப்பி வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x