

கர்நாடகாவில் திருமணம் செய்துகொள்வதாக கூறி 20 பெண்களை வன்கொடுமை செய்து, சயனைடு கொடுத்து கொன்ற மோகன்குமாருக்கு 19-வது வழக்கில் மங்களூரு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த மோகன் குமார் (56) அங்குள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றினார். கடந்த 2009-ம் ஆண்டு பண்டுவலாவை சேர்ந்த அனிதா (22) என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் கருக்கலைப்பு மாத்திரை எனக் கூறி, சயனைடு மாத்திரையை கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பினார். அதை சாப்பிட்ட அனிதா ரத்த வாந்தி எடுத்த நிலையில், ஹாசன் பேருந்து நிலையத்தில் பிணமாக கிடந்தார்.
இது தொடர்பாக தனிப்படை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, 6 ஆண்டுகளில் இதே பாணியில் 20 பெண்கள் கொல்லப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கில், 2009 அக்டோபர் 17-ம் தேதி சுள்ளியா பேருந்து நிலையத்தில் ஒரு பெண்ணை சயனைடு கொடுத்து கொல்ல முயன்றபோது மோகன் குமாரை கைது செய்தனர்.
20 பெண்களை திருமணம் செய்து கொள்வதாக மோகன் குமார் ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து சயனைடு கொடுத்து கொன்ற வழக்கு மங்களூரு விரைவு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இதில் 18 வழக்குகளின் விசாரணை முடிந்துள்ள நிலையில், 19-வது வழக்கின் தீர்ப்பை நீதிபதி சையத்துனியா நேற்று முன் தினம் அளித்தார். அப்போது, ‘‘கேரள மாநிலம் காசர் கோட்டை சேர்ந்த 23 வயது பெண்ணை மோகன் குமார் கடந்த 2006-ம் ஆண்டு வன்கொடுமை செய்து, மைசூரு பேருந்து நிலையத்தில் சயனைடு கொடுத்து கொன்றது அரசுத் தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறேன்” என உத்தரவிட்டார்.
இதற்கு முந்தைய 18 வழக்குகளில் 5-ல் மோகன் குமாருக்கு தூக்கு தண்டனையும், 5-ல் ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியரின் பின்னணி
கர்நாடக மாநிலம் தக் ஷின கன்னட மாவட்டம் மங்களூருவை சேர்ந்த மோகன் குமார், தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். 1987-ம் ஆண்டு மஞ்சுளா என்பவரை திருமணம் செய்த இவருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில் முதல் மனைவியை பிரிந்த மோகன்குமார் ஸ்ரீதேவி ராய் என்பவரை 1993-ல் 2 -வது திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். குடும்ப வாழ்வில் ஒழுக்கக்கேட்டுடன் இருந்ததால் மோகன் குமார், பள்ளியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால் 2003-ம் ஆண்டு 2-வது மனைவியையும் விட்டுப் பிரிந்த மோகன் குமார், பெண்களை திருமண ஆசைக்காட்டி தனது வலையில் சிக்க வைத்திருக்கிறார். பிறகு அவர்களை பாலியல் வன் கொடுமை செய்துவிட்டு கருத்தடை மாத்திரை என ஏமாற்றி, சயனைடு மாத்திரைகளை கொடுத்து கொன்றுள்ளார்.