4,000 சதுர அடி பரப்பளவு; 100 பேருக்கு உணவு சமைக்கும் வசதியுடன் ட்ரம்ப் பயணத்துக்காக ‘ஏர்போர்ஸ் ஒன்’ விமானம்

4,000 சதுர அடி பரப்பளவு; 100 பேருக்கு உணவு சமைக்கும் வசதியுடன் ட்ரம்ப் பயணத்துக்காக ‘ஏர்போர்ஸ் ஒன்’ விமானம்
Updated on
1 min read

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது மனைவி மெலானியா ட்ரம்புடன் இந்தியாவுக்கு வரும் 24-ம் தேதி வருகை தரவுள்ளார்.

அவர்கள் ‘ஏர்போர்ஸ் ஒன்’ விமானம் மூலமாக இந்தியா வரவுள்ளனர். அமெரிக்க அதிபரின் பயணத்துக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த ஏர்போர்ஸ் ஒன் விமானம் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டதாகும். இதன் காரணமாகவே, அது ‘பறக்கும் வெள்ளை மாளிகை' எனவும் அழைக்கப்படுகிறது.

‘ஏர்போர்ஸ் ஒன்' விமானம் 232 அடி நீளமும் 195 அடி அகலமும் கொண்டது. இதன் பிரம்மாண்டத்தை விளக்க வேண்டுமெனில், இந்த விமானத்தை 6 மாடி கட்டிடத்தின் உயரத்துடன் ஒப்பிடலாம். 3 தளங்களைக் கொண்ட இந்த விமானத்தின் மொத்த பரப்பளவு 4,000 சதுர அடியாகும். விமானத்தின் உட்பகுதியானது 5 நட்சத்திர உணவகத்துக்கு ஈடாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

விமானத்துக்குள் அதிபர் தங்குவதற்காக சகல வசதிகளைக் கொண்ட பிரத்யேக அறை, அதிபருடன் வரும் உயரதிகாரிகள் தங்குவதற்கென தனித்தனி அறைகள், உடற்பயிற்சிக் கூடம், மருத்துவக் குழுவினர் அடங்கிய மருத்துவமனை, செய்தியாளர் சந்திப்பு அறை, கருத்தரங்க அறை ஆகியவை உள்ளன. அதேபோல், ஒரே நேரத்தில் 100 பேருக்கு உணவு சமைக்கும் வசதிகள் கொண்ட சமையற்கூடமும் அமைந்துள்ளது.

இந்த ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் உள்ள அனைத்து ஜன்னல்களும், பீரங்கி குண்டுகளால் கூட துளைக்க முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல், விமானத்தின் அடிப்பகுதியானது அணு குண்டு தாக்குதலையும் தாங்கும் கட்ட மைப்பைக் கொண்டது.

அதுமட்டுமின்றி, விமானம் முழுவதிலும் நவீன ரேடார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ‘ஏர்போர்ஸ் ஒன்' விமானத்தை தாக்க வரும் ஏவுகணைகளை குழப்பமடைய செய்து திசை மாற்றி விடக்கூடிய வகையில் இந்த ரேடார்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல், தேவை ஏற்படும் பட்சத்தில் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தவும் இந்த விமானத்தால் முடியும்.

அவசரக் காலங்களில், பறந்து கொண்டிருக்கும் போதே இந்த விமானத்தில் எரிபொருளை நிரப்பிக் கொள்ள இயலும். அதுமட்டுமின்றி, எந்நேரமும் வெள்ளை மாளிகையை தொலைபேசி மூலமாகவும், காணொலி மூலமாகவும் தொடர்பு கொள்ளும் வசதிகள் இருக்கின்றன. 85 தொலைபேசிகளும், 20 அதி நவீன தொலைக்காட்சிகளும் வைக்கப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in