21-ம் நூற்றாண்டில் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜிஎஸ்டி வரிதான்: சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம்

பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி : கோப்புப்படம்
பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி : கோப்புப்படம்
Updated on
1 min read

21-ம் நூற்றாண்டில் மிகப்பெரிய முட்டாள்தனம் மத்திய அரசு கொண்டுவந்த சரக்கு மற்றும் சேவை வரிதான்(ஜிஎஸ்டி). இந்தியா வல்லரசாக வர வேண்டுமானால் ஆண்டுக்கு 10 சதவீதம் வளர்ச்சி இருந்தால்தான் 2030ம் ஆண்டில் வல்லரசாக முடியும் என்று பாஜக எம்.பி.யும் மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம் செய்துள்ளார்

'இந்தியா- 2030-க்குள் பொருளாதாரத்தில் வல்லரசு' என்ற தலைப்பில் ஹைதராபாத்தில் கருத்தரங்கு இன்று நடந்தது. இதில் பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் ஆட்சிக்குப்பின் ஆண்டுக்கு ஆண்டு 8 சதவீதம் பொருளாதார வளர்ச்சியைப் பெற்றும், சீர்திருத்தங்களால் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை.

இந்தியா தற்போது தேவைப் பற்றாக்குறையால் திண்டாடுகிறது. அதாவது மக்கள் கையில் செலவு செய்யப் பணம் இல்லை. அடுத்த 10 ஆண்டுக்கு 10 சதவீதம் பொருளாதார வளர்ச்சி இருந்தால்தான் இந்தியா 2030-ம் ஆண்டில் பொருளாதாரத்தில் வல்லரசாக முடியும்.

இப்போது இருக்கும் பொருளாதார வளர்ச்சியில் சென்றால், 50 ஆண்டுகளுக்குப்பின்புதான் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் நம்மால் சவால் விடுக்க முடியும்.

வருமானவரி மூலம் முதலீட்டாளர்களை நெருக்கடிக்கு ஆளாக்கக் கூடாது. 21-ம் நூற்றாண்டில் மிகப்பெரிய முட்டாள்தனமானது ஜிஎஸ்டி வரியைக் கொண்டுவந்ததாகும். மத்திய அரசு கொண்டுவந்த ஜிஎஸ்டி வரி மிகவும் குழப்பமானது, யாராலும் புரிந்து கொள்ள முடியாதது. எந்த படிவத்தை நிரப்பது எனத் தெரியவில்லை.

ராஜஸ்தானின் பார்மர் பகுதியில் இருந்து ஒருவர் வந்து என்னிடம், எங்கள் பகுதியில் மின்சாரமே இல்லை எவ்வாறு நாங்கள் ஜிஎஸ்டி படிவத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்வது என்று கேட்டார். நான் முதலில் உன்தலைக்குள் ஏற்று, அதன்பின் பிரதமர் மோடியிடம் இதைக் கூறு என்றேன்.

இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்தம் காங்கிரஸ் காலத்தில், நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்டது. அதற்காக நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in