

பள்ளி செல்லும் குழந்தைகளின் புத்தக மூட்டைச் சுமையைக் குறைக்க, மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை பரிந்துரைத்துள்ளது. அதன்கீழ், நன்றாக திட்டமிடப்பட்ட பாட வேளைகளும், குழந்தைகளுக்கு ஏதுவான எடை குறைந்த புத்தகப் பைகள் இருக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைகள் 'கைடு' புத்தகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கவும், இரண்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகள் தங்கள் புத்தகப் பைகளை பள்ளியிலேயே வைத்துச் செல்லவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் இன்று (புதன்கிழமை) மத்திய கல்வி ஆலோசனை வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
இந்தப் புதிய திட்டத்தின் கீழ், 'வகுப்பறை நூலகங்கள்' அமைத்து அதன் மூலம் மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தவும், அன்றைய பாட வேளைக்கான புத்தகங்களைக் கொண்டு வராத குழந்தைகளுக்கு குறிப்பிட்ட புத்தகத்தை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
புத்தக மூட்டைச் சுமை குழந்தைகளின் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தி வரும் பாதிப்புகள் குறித்த அக்கறை, இன்றைய நாட்களில் பெருகி வரும் வேளையில், இத்திட்டம் பரிந் துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
இந்தத் திட்டத்தின் கீழ், பள்ளி முதல்வர்களும், ஆசிரியர்களும், அன்றன்றைய நாளுக்கான பாட வேளைகளை மிகச் சரியாகத் திட்டமிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், அன்றைய நாளுக்குத் தேவைப்படாத புத்தகங்களை மாணவர்கள் கொண்டு வருவது தடுக்கப்படும் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
அதேபோல குழந்தைகள் சுமப்பதற்கு ஏற்ற எடை குறைந்த புத்தகப்பைகளை வாங்க பெற்றோர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறும்போது, "இந்தத் திட்டத்தில் கூறப்பட்டுள்ள ஒரு சில விதிமுறைகள் ஏற் கெனவே கல்வி வாரியங்களால் வகுக்கப்பட்டவைதான். ஆனால் அவை முறையாகப் பின்பற்றப் படுவதில்லை" என்றார்.