உ.பி.யில் இன்று 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்: முதல் நாளில் 2.39 லட்சம் மாணவர்கள் வரவில்லை

கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Updated on
1 min read

உத்தரப் பிரேதேச மாநிலத்தில் இன்று 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கும் நிலையில் முதல் நாளிலேயே 2.39 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மொத்தம் 56 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அதில் 2.39 லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை.

உத்தரப் பிரதேச மாநிலம் பெரும்பாலும் கல்வியறிவில் பின்தங்கிய மாநிலமாகக் கருதப்படுகிறது. கடந்த காலங்களில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் முறைகேடாகத் தேர்வு எழுவதும், பிட் அடித்து எழுதுவதும் அதிகரித்து வந்தது.

ஆனால், யோகி ஆதித்யநாத் முதல்வராக வந்தபின், தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்களைச் செய்து, கடும் கெடுபிடிகளைக் கொண்டுவந்தார். இதனால் தேர்வுக்குப் பயந்து மாணவர்கள் பலர் வராமல் இருப்பது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் உ.பி.யில் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இதில் மொத்தம் 56 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதப் பதிவு செய்திருந்தார்கள். முதல் நாளான இன்று தேர்வு எழுத 2 லட்சத்து 39 ஆயிரத்து 133 மாணவர்கள் வரவில்லை என்று மத்தியமிக் சிக்சா பரிசத் தெரிவித்துள்ளது.

10-ம்வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 42 பேரும், 12-ம் வகுப்பில் 82 ஆயிரத்து 91 பேரும் தேர்வு எழுத வரவில்லை.

இன்று முதல் நாள் முதல் தேர்வு இந்தியில் நடந்த போதிலும் தாய்மொழித் தேர்வையே 2.39 லட்சம் மாணவர்கள் தவிர்த்திருப்பது வியப்பாக இருக்கிறது.

மேலும், தேர்வில் காப்பி அடித்தது, முறைகேடாகத் தேர்வு எழுத வந்தது ஆகியவை தொடர்பாக 6 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 10-ம் வகுப்பில் 26 மாணவர்கள், ஒரு மாணவி, 12-ம் வகுப்பில் 7 மாணவர்கள் தேர்வில் முறைகேடு செய்து முதல் நாளே பிடிபட்டுள்ளார்கள்.

இதுகுறித்து உ.பி. பள்ளித் தேர்வுத் துறை செயலாளர் நீனா ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "பல மாவட்டங்களில் பொதுத்தேர்வின் முதல் நாளிலேயே ஏராளமான மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. கடந்த ஆண்டில் தேர்வு தொடங்கிய முதல் நாளில் 40 ஆயிரத்து 392 மாணவர்கள் தாய்மொழித் தேர்வு எழுத வரவில்லை. இந்த முறை அதிகரித்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணை முதல்வர் தினேஷ் ஷர்மா கூறுகையில், "2.39 லட்சம் மாணவர்கள் தேர்வின் முதல் நாளே வராமல் இருந்தது எனக்கு வியப்பாக இல்லை. ஏனென்றால் 75 மாவட்டங்களில் தேர்வு எந்தவிதமான பிரச்சினையும் இன்றி நடந்து வருகிறது" எனத் தெரிவித்தார்.

கடந்த 2018-ம் ஆண்டில் 12.5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதப் பதிவு செய்திருந்த நிலையில், 6.69 லட்சம் மாணவர்கள் மட்டுமே இறுதியில் தேர்வு எழுதியது குறிப்பிடத்தக்கது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in