

கேரள மாநில பயிற்சி காவலர்களுக்கான உணவுப் பட்டியலில் இருந்து மாட்டிறைச்சி நீக்கப்படுவதாக வெளியான தகவலை ஒட்டி கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள முக்கம் காவல் நிலையம் அருகே கேரள காங்கிரஸார் ரொட்டியும் பீஃப் குழம்பும் வழங்கி போராட்டம் நடத்தினர்.
கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கே.பிரவீன் குமார் தலைமையில் முக்கம் காவல் நிலைய வாயிலில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குமார், "பயிற்சி காவலர்களுக்கு உணவில் மாட்டிறைச்சியை நிறுத்துவது என்பது கேரள முதல்வர் பினராய் விஜயன் சங்கபரிவாரக் கொள்கைகளுக்கு இசைவு தெரிவிப்பதற்கான தெளிவான சமிக்ஞை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
கேரள முதல்வராகப் பதவியேற்ற உடனேயே பினராயி விஜயன் மோடியை நேரில் சந்தித்தார். பாஜகவுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே மாநில டிஜிபி-யாக லோக்நாத் பெஹேரா நியமிக்கப்பட்டார் பெஹேரா, குஜராத் கலவர வழக்கில் மோடி, அமித் ஷாவுக்கு ஆதரவாக செயல்பட்டவர். தற்போது அவர், தனது சங்பரிவார் கொள்கைகளை காவல்துறையில் நடைமுறைப் படுத்துகிறார்" என்று குற்றஞ்சாட்டினார்.
கேரள மாநில பயிற்சி காவலர்களுக்கான உணவுப் பட்டியலில் இருந்து மாட்டிறைச்சி நீக்கப்படுவதாக சில ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையிலேயே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
ஆனால், கேரள காவல்துறையோ புதிதாக பயிற்சியில் இணையும் காவலர்களுக்கு உணவுப் பட்டியலில் மாட்டிறைச்சி நீக்கப்படுவதாக வந்த தகவல் அடிப்படை ஆதாரமற்றது என்று விளக்கமளித்தது.
மேலும், இது தொடர்பாக காவல்துறை சார்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிடப்பட்டது.
அதில் "மெஸ் கமிட்டியின் முடிவின் படி, அந்தந்தப் பகுதியில் கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்களை வைத்து தரமான ஆரோக்கியமான உணவுகளை பயிற்சியாளர்களுக்கு வழங்க வேண்டும்.
அந்த உணவு நாள் முழுவதும் அவர்களின் பயிற்சிக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்க வேண்டும். இது மெஸ் கமிட்டியில் அங்கம் வகிக்கும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்களின் பிரதிநிதிகள் இணைந்தே எடுத்தது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.