

மூன்றாவது முறையாக டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் கேஜ்ரிவால் தனக்காக எந்த இலாகாவையும் வைத்துக் கொள்ளவில்லை. இவருடன் இளைஞர், பெண்கள் எம்எல்ஏக்களாக அதிகமாக இருந்தும் அவர்களில் ஒருவரும் அமைச்சராக்கப்படாதது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
டெல்லியில் பிப்ரவரி 16 இல் பதவி ஏற்ற முதல்வர் கேஜ்ரிவால் தனது அமைச்சரவைக்கு நேற்று இலாகாக்களை ஒதுக்கியுள்ளார். இதுபோல், வழக்கமாக புதிதாகப் பதவியேற்ற பின் மாநில முதல்வர் உள்துறை, நிதி உள்ளிட்ட முக்கிய பல இலாகாக்களை தம்மிடம் வைத்துக் கொண்டு மற்றவற்றை தம் சக அமைச்சர்களுக்கு ஒதுக்குவது வழக்கமாக உள்ளது.
மீண்டும் பதவி ஏற்கும் அரசானாலும் இலாகாக்களை அமைச்சர்களுக்கு மாற்றி அளிப்பதும் வழக்கமாக உள்ளது. இதுபோல் அன்றி, வித்தியாசமான முறையில் முதல்வர் கேஜ்ரிவால் தம் அமைச்சரவையை இந்த முறை அமைத்துள்ளார்.
இதில், முன்பு போலவே வெறும் ஆறு அமைச்சர்கள் மீண்டும் அமர்த்தப்பட்டுள்ளனர். பெரிய மாற்றம் இன்றி இதுவரை தொடர்ந்தவர்களுக்கே அவர்களது இலாகாக்கள் மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளன.
முக்கியமாக தம்மிடம் இருந்த குடிநீர் வளர்ச்சித்துறையையும் மருத்துவநலத்துறை அமைச்சரான சத்யேந்திரா ஜெயினுக்கு கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளருமான முதல்வர் கேஜ்ரிவால் இரண்டாவது முறையாக தேசிய அரசியலில் நுழைய முயல்வதாகவும் கணிக்கப்படுகிறது.
இதை முன்கூட்டியே ‘இந்து தமிழ்’ நாளேட்டில் விரிவான செய்தி பிப்ரவரி 15-ல் வெளியிடப்பட்டிருந்தது. 2013 தேர்தல் வெற்றிக்குப் பின் 2014 இல் மக்களவையில் போட்டியிட்டவருக்குத் தோல்வி ஏற்பட்டது. இதனால், டெல்லியை விட்டு இனி தான் போக மாட்டேன் என அம்மாநிலவாசிகளிடம் மன்னிப்பு கோரி 2015 தேர்தலைச் சந்தித்திருந்தார் கேஜ்ரிவால். இந்நிலையில், கடந்த முறையைப் போல் இந்த மூன்றாவது முறையும் பெண்களுக்கு அமைச்சரவையில் போதுமான இடம் ஒதுக்கப்படவில்லை.
டெல்லியில் இதுவரை இல்லாத வகையில் இந்தமுறை எட்டுப் பெண்கள் எம்எல்ஏக்களாக இருந்தும் அவர்களில் ஒருவர் கூட இடம் பெறவில்லை. அதேபோல், இளைஞர்களும் அதிக அளவில் ஆம் ஆத்மி கட்சியில் எம்எல்ஏக்களாக வென்றும் அவர்களிலும் எவரும் இல்லாமல் போனதும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி விட்டது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் தலைவரான பத்திரிகையாளர் அசுதோஷ் கூறும்போது, ''டெல்லியில் ஆண், பெண் கிட்டத்தட்ட சமபங்காக இருந்தும் பெண்களில் ஒருவர் கூட அமைச்சராக்கப்படாது நியாயமல்ல. இதன் மூலம், தம் பெண் எம்எல்ஏக்கள் திறமையானவர்கள் அல்ல என ஜனநாயக முறைக்கு எதிராக ஒரு தவறான தகவலை அளிக்கிறார் கேஜ்ரிவால். டெல்லியின் 59 சதவிகிதம் இளைஞர்கள் வாக்குகள் பெற்றும் அவர்களில் ஒருவரும் அமைச்சரவையில் இடம் அளிக்காதது முற்றிலும் தவறானது'' எனத் தெரிவித்தார்.
முதல் முறையாக 2013 இல் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்த கேஜ்ரிவால் தன் அமைச்சரவையில் தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்ணான ராக்கி பிர்லானை மட்டும் சேர்த்திருந்தார். இந்தமுறை அவர் மீண்டும் எம்எல்ஏவாகியும் அவருக்கும் ஏனோ வாய்ப்பளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.