

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு தனது வீட்டருகே 6 அடி உயரத்தில் சிலை வைத்து பூஜை செய்து வரும் தெலங்கானாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தான் எப்படியாவது ட்ரம்ப்பை சந்திக்க அரசாங்கம் உதவ வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் கொன்னாய் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் புஸ்ஸா கிருஷ்ணன். இவர், தனது வீட்டின் அருகே 6 அடி உயரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு சிலை வைத்துள்ளார். அந்த சிலைக்கு தினமும் பூஜை செய்வதோடு ட்ரம்பின் நீண்ட ஆயுளுக்காக வெள்ளி தோறும் விரதமும் இருக்கிறார்.
இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு ட்ரம்ப் அளித்த பேட்டியில், "இந்திய - அமெரிக்க உறவு வலுவாக இருக்க நான் விரும்புகிறேன். என் சட்டைப்பையில் ட்ரம்ப்பின் புகைப்படத்தை வைத்துளேன்.
எனது முக்கியமான வேலைகளுக்கு முன் அந்தப்படத்தை வணங்குகிறேன். நான் எப்படியாவது அவரை சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
எனது கனவை நிறைவேற்றித்தர மத்திய அரசை வேண்டுகிறேன். எனக்கு ட்ரம்ப் கடவுளைப் போன்றவர். அதனாலேயே அவருக்கு என் வீட்டருகில் சிலை எழுப்பியுள்ளேன். இதைக் கட்டிமுடிக்க ஒரு மாதம் ஆனது. 15 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்" என்றார்.
ட்ரம்ப் கிருஷ்ணன்..
ட்ரம்பின் தீவிர ரசிகரான புஸ்ஸா கிருஷ்ணனை அனைவரும் 'ட்ரம்ப் கிருஷ்ணன்' என்றுதான் அழைக்கின்றனர். அவருடைய வீடும் ட்ரம்ப் வீடு என்றே அழைக்காப்படுகிறது. மேலும் கிராம மக்கள் யாரும் கிருஷ்ணனின் பூஜைகளுக்கு தடை சொல்வதில்லை. மாறாக அவருக்கு அரசாங்கம் ட்ரம்ப்பை சந்திக்க உதவ வேண்டும் என்றே கோருகின்றனர்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது மனைவி மெலானியா ட்ரம்புடன் வரும் பிப்.24-ம் தேதி இந்தியா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.