மணிப்பூரில் 5 நாட்களாக பலத்த மழை: நிலச்சரிவில் சிக்கி 21 பேர் பலி

மணிப்பூரில் 5 நாட்களாக பலத்த மழை: நிலச்சரிவில் சிக்கி 21 பேர் பலி
Updated on
1 min read

மணிப்பூர் மாநிலத்தில் சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதில் சண்டல் மாவட்டம் ஜோமோல் கிராமத்தில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டு 21 பேர் உயிரிழந்தனர்.

மணிப்பூர் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 5 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மணிப்பூரின் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. சாக்பி, நம்புல் உள்ளிட்ட முக்கிய நதிகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்கிறது.

கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மணிப்பூர் வெள்ளத்தில் மிதக்கிறது என்று மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சண்டல், தோபல் மாவட்டங்களில் 10-க்கும் மேற்பட்ட பாலங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தனித்தீவுகளாக மாறியுள்ளன. இரு மாவட்டங்களிலும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சண்டல் மாவட்டம், கெங்ஜாய் அருகில் உள்ள ஜோமோல் மலைப்பிரதேச கிராமத்தில் நேற்று மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 21 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.

இதுகுறித்து சண்டல் தொகுதி எம்எல்ஏ விக்டர் நங்லங் கூறியதாவது: நிலச்சரிவு ஏற்பட்ட ஜோமோல் கிராமத்துக்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். ஆனால் அனைத்து சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியை அடைவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலைதான் மீட்புப் படையினர் சம்பவ பகுதிக்கு செல்ல முடியும். பல்வேறு பகுதிகளில் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் வெள்ள பாதிப்பு நிலவரங்களை அறிய முடியவில்லை. எனினும் நிவாரண நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ள நிவாரண நடவடிக்கை களில் மணிப்பூர் அரசு மெத்தனமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளப் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய தலைமைச் செயலாளர் லாம்குங்கா தலைமையிலான குழுவினர் நேற்று இம்பால் அருகில் உள்ள நரோம்தாங், லாம்பெல் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றனர். அவர் களை அப்பகுதி மக்கள் முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in